இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போது ஏதேனுமொரு விஷயத்தை மையமாக வைத்து, அதனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய அபாயம் ஏற்படப் போவதாக மக்களை பீதியடைய செய்யும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திட்டமிட்ட போலிப்பிரசாரங்கள்
ஆனால் அவ்வாறு எந்த அபாயமும் தற்போது ஏற்படவில்லை. கடந்த காலங்களில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் ஊழியர் இலாப நிதியத்துக்கு பெரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக மக்களை பயமுறுத்தினர்.
ஆனால் இன்று அவ்வாறு ஏதுவுமே இடம் பெறவில்லை.
எனவே சமூகத்தில் அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறு திட்டமிட்ட போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
அதற்கமையவே மருந்துகள் குறித்தும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தியா, இலங்கைக்கு மாத்திரமின்றி பலநாடுகளுக்கும் மருந்துகளை விநியோகித்து வருகிறது. எனவே ஒரு சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான கருத்துக்கள் இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
-tw