மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப் படவில்லை

போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் இருந்து வெளியேறி ஓராண்டு நிறைவடைந்துள்ள போதிலும், போராட்டத்தினூடாக மக்கள் எதிர்பார்த்த அபிலாஷைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆளுகையுடன், ஊழலை சீர் செய்ய வேண்டும் என 51% மக்கள் ஆய்வில் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், புதிய பிரதமர் நியமனம், அமைச்சரவை நியமனம் மற்றும் அப்போதைய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் என்பன  இடம்பெற்ற போதிலும் மக்களின் விருப்பங்களும் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படவில்லை என Verité Research நிறுவனத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

போராட்டம், மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வழிவகுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, 60 வீதமானோர்  ‘பெரும்பாலும் இல்லை’ என தெரிவித்ததாக Verité Research நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

11 வீதமானோர் இந்த வினாவிற்கு ஆம் என்ற பதிலளித்துள்ள போதிலும், 29 வீதமானோர்  ‘அபிப்பிராயம் இல்லை’ எனவும் பதிலளித்துள்ளனர்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், எந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என மக்களிடம் வினவப்பட்டுள்ளது.

பதிலளித்தவர்களில் 51 வீதமானோர் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.

34 வீதமானோர் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை விரும்புவதாகவும்,  15 வீதமானோர்  ஜனநாயக அவகாசத்தை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கருதுவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

 

-nf