நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை

வீடியோ எடுத்தால் உன்னை கொலை செய்வேன் என பௌத்த பிக்கு ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை நேற்றைய சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(23.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

” நீ வீடியோ எடுத்தால் உன்னை கொலை செய்வேன் என மயிலத்தமடு மாதவனை பகுதியில் ஊடகவியலாளர்களை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவமானது இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் சிறைப்பிடிப்பு

மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு சென்ற பல்சமய ஒன்றியத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த பிக்குவான புல்லருவே மேதானந்த கில்மி தலைமையிலான குழுவினர் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தமை இந்த நாட்டின் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மிக முக்கியமாக பிக்கு தலைமையிலான குழுவினர் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்தே தங்களது அச்சுறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அவர்களின் கழுத்தை நசுக்கிய பிக்குவின் தலைமையிலான சட்டவிரோத குடியேற்றவாசிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

நாங்கள் எங்களது மாவட்டத்தில் உள்ள கால் நடை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக சென்றிருந்தோம்.

ஆனால் எமது மாவட்டத்திற்குள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பிக்கு தலைமையிலான குழுவினர் வந்து மும்மதத் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் சிறைப்பிடித்து வைத்திருந்ததோடு நாம் கொண்டு சென்ற புகைப்பட கருவிகள், கையடக்க தொலைபேசிகளை பறிப்பதற்கு முயற்சி செய்ததோடு நாங்கள் எடுத்த புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடக் கூடாது என்று கூறி என்னை அச்சுறுத்தி வெள்ளைப் பேப்பரில் எழுதி கையொப்பம் பெற்றுக்கொண்டனர்.

“நீ வீடியோ எடு நான் உன்னை கொலை செய்வேன்” என அந்த பிக்கு மிக ஆவேசமாக எம்மை அச்சுறுத்தினார். எனது புகைப்படக் கருவியை பறித்து அதில் உள்ள புகைப்படங்களை அழிக்கச் சொன்னார்கள்.

காவல்துறையினர் அந்த இடத்திற்கு வருவதற்கு ஐந்து மணித்தியாலங்கள் எடுத்தமையால் நாங்கள் அவர்களிடம் சூழ்நிலை கைதிகளாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் என்ன என்னவெல்லாம் செய்ய சொல்லி அச்சுறுத்தினார்களோ அதையெல்லாம் செய்தோம்.

மகாவலி அதிகாரசபையினரே பின்புலமாக

எமது மாவட்டத்தில் எமக்கு எமது ஊடக பணியை மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு தடையாக, அச்சுறுத்தலாக இருந்த பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது?

அந்த பகுதியிலே காவல் கடமையில் இருக்கும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோத்தர்களின் முன்னிலையிலேயே இச் சம்பவங்கள் இடம்பெற்றன.

அந்த பகுதியிலே நடைபெற்ற சட்டவிரோத குடியேற்றவாசிகளின் நடவடிக்கைகளை நாங்கள் புகைப்படங்கள் காணொளிகள் எடுத்ததன் காரணமாகவே எம்மை அவர்கள் சிறைப்பிடித்தனர்.

அவர்களது சட்டவிரோத செயற்பாடுகள் வெளியுலகிற்கு தெரிந்து விடும் என்பதனாலேயே அவர்கள் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்.

எனவே மேற்படி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு எம்மை சிறைப்பிடித்து வைத்திருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ” என அவர் மேலும் தெரிவித்தார்.

மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் மகாவலி அதிகாரசபையினரே பின்புலமாக செயற்படுவதாக மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ib