இலங்கை அனைவருக்கும் சொந்தமானது

இலங்கையில் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்துவதற்கான காலம் தற்பொழுது வந்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்துக்காக போராட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்திருந்ததாக எல்லே குணவன்ச தேரர் நினைவூட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கை பிரித்து தருமாறு கோரி போராடாது முழு இலங்கையும் அவர்களுடையது எனும் நிலைப்பாட்டுக்கு வர வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அனைவருக்கும் சொந்தமானது

நாகதீபம் பௌத்தர்களுடையது எனவும் தெய்வேந்திர முனை தமிழர்களுடையது எனவும் கூறுவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டின் ஒரு பகுதியை மாத்திரம் பிரித்து தருமாறு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இலங்கை அனைவருக்கும் சொந்தமானது எனவும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைப்பாட்டுக்கு அனைவரும் வருவதன் மூலம் பிரிவினைகளை இல்லாது செய்ய முடிவதோடு நாட்டை கட்டியெழுப்பவும் முடியுமென அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ib