இந்தியா இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கும் முன்மொழிவு

இந்திய – இலங்கை உறவு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு துரோகம் இழைத்தவர்கள் ஆட்சியாளர்களே

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தேச பாலம், பொதுவாக்கெடுப்பு மூலம் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் இலங்கைக்கு துரோகம் இழைத்தவர்கள் ஆட்சியாளர்களே. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு பாதை அமைக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களே இவ்வாறான பிரேரணைகளை முன்வைத்து எமது தேசத்தை காட்டிக்கொடுக்கின்றனர். கடந்த காலத்தில் இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட விதம் மற்றும் வான்வழியாக பருப்பை வீசியமை அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

பண்டைய மன்னர்கள் இந்தியாவுடனான தங்கள் உறவுகளை வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தினர்.

எனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு வாக்கெடுப்பின் மூலம் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கடந்த காலத்தில் இந்தியாவின் பகுதிகளாக இருந்தன, ஆனால் இலங்கை எப்போதுமே ஒரு தனி நாடாகவே உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணம்

சில அரசியல் தலைவர்கள் கோவில்களிலும், தேவாலய விருந்துகளிலும் சமய நிகழ்ச்சிகளில், தமது முகத்தை காட்டுகின்றனர்.

எனினும் இந்த அரசியல் தலைவர்கள் தங்கள் பிம்பத்தை உயர்த்திக் கொள்வதற்கு மதநிகழ்ச்சிகளை பயன்படுத்தக் கூடாது.

1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரமே இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், இலங்கையின் 80 சதவீத வளங்களை 20 சதவீத மக்கள் அனுபவிக்கின்றனர்.

மீதமுள்ள 80 சதவீத மக்கள் 20 சதவீத வளங்களுடன் உள்ளனர். எனவே இந்த மோசமான அமைப்பை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

 

-tw