மக்களின் வாக்களிக்கும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது

இலங்கையில் நடைபெறவுள்ளஅதிபர் தேர்தலை பிற்போடும் அல்லது ஒத்திவைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.

இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிபர் அரசாங்கத்தை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் தேர்தலும் இவ்வாறாக ஒத்திவைக்கப்படலாமென சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன தெரிவித்துள்ளன.

வாக்களிக்கும் உரிமை

மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க எவருக்கும் முடியாதெனவும் இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இரண்டு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் பிற்போடப்படுவது மிகவும் ஆபத்தானது எனவும் அரசமைப்பு மாற்றங்கள் மூலம் இதனை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து அதிபர் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விஜித ஹேரத் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

-fmt