ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.09.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான  தகவல்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

சர்வதேச விசாரணை

அரசாங்கமே இந்த தகவல்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். எனவே சனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சர்வதேச விசாரணை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என அரசாங்க அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இன்றைய தினம் கூறியதாகவும், இந்த கூற்றின் மூலம் அவர் கர்தினாலை இழிவுப்படுத்தி உள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-tw