2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சூத்திரதாரி யாராக இருக்கும் என்பது தொடர்பான சந்தேகங்கள், ஊகங்கள், தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே எல்லோர் மனதிலும் அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப எழுந்துள்ளன.
இப்பின்புலத்தில் சனல் 4 தொலைக்காட்சி முழு விபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கின்றது.
பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று பலர் மீது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்தன. ஜெனீவா மனித உரிமைச் சபை அறிக்கைகளிலும் குற்றச்சாட்டு விபரங்கள் உண்டு.
ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்தனை குற்றங்களையும் மூடி மறைத்து 2020 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவைக் களமிறக்கி அவரை வெற்றிபெற வைப்பதில் இலங்கைக் கத்தோலிக்கத் திருஅவையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முழுமையாக ஈடுபட்டார் என்பது பகிரங்கமான உண்மை.
இதனால் தமிழர்களின் அரசியல் விடுதலை மற்றும் இறுதிப் போரில் நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு அக்கறையும் மல்கம் ரஞ்சித்திடம் இருந்திருக்கவில்லை என்பது அப்போதே பட்டவர்த்தனமாகியது.
2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டபோது, கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிப்படையாகவே நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்த மல்கம் ரஞ்சித், தமிழர்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்பதைவிடவும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நீட்சியிலேயே முழுக் கனத்தையும் செலுத்தியிருந்தார் என்பதும் பகிரங்கம். இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதன் சட்டங்களும் பல்லின சமூகங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதைக்கூட மல்கம் ரஞ்சித் ஏற்கத் தயாராக இல்லை.
இப்பின்னணியிலேதான் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கியதோடு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த விசாரணைகள் இடம்பெற்றுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று மல்கம் ரஞ்சித் அப்போது உறுதியாக நம்பிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனால் இறுதிப் போரில் நடந்த மனிதப் படுகொலைகள், தமிழ் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் மல்கம் ரஞ்சித் கவனம் செலுத்தியதாக இல்லை.
2012 இல் முதன் முறையாக இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, சர்வதேச விசாரணை தேவையில்லை என்று மல்கம் ரஞ்சித் நியாயப்படுத்தியிருந்தார்.
-ad