அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் 2023 நிலையான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி விசேட உரையாற்ற உள்ளார்.
அதற்கு இணையாக, மிகவும் சிறந்த புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட “காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்கக் கூடிய உலகளாவிய பொருளாதாரத்திற்கு மிகவும் சமமான மற்றும் விரைவான மாற்றத்திற்கான உலகளாவிய கூட்டு விருப்பத்தை நிரூபிப்பதில் ஒரு முக்கியமான அரசியல் மைல்கல்லை எதிர்பார்த்து, ஐ.நா பொதுச்செயலாளரால் கூட்டப்படும் “காலநிலை அபிலாஷைகள் பற்றிய மாநாட்டில்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்ற உள்ளார்.
அபிவிருத்திக்கான நிதியியல் தொடர்பான ‘கடன் நிலைபேற்றுத் தன்மையை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய நிதிப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் இடம்பெறும் உயர்மட்டக் கூட்டத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
தமது நியூயோர்க் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்திந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சுமார் 40 முன்னணி தனியார் வர்த்தக நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புகள் தொடர்பான
வட்டமேசை கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார்.
மேலும், கடல்சார் நாடுகளுக்கான மூன்றாவது ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய உரையை ஆற்றவுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி , ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிநாட்டலு வல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.
-tw