இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 ஆவது அமர்வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த கலந்துரையாடல்களின் போதே பேர்ள் அமைப்பு தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ளது.
நீதிக்கான முயற்சிகள் இலங்கை அரசினதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளினதும் விருப்பத்திலேயே தங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்புப் படையினர் குறித்தும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க மறுத்துள்ளனர் – தவறியுள்ளனர் எனவும் பேர்ள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் ஆழமாக வேரூன்றிய சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதம் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பின் பின்னணியில் முக்கிய உந்துசக்தியாகச் செயற்படுகின்றது, இலங்கையில் உறுதியற்ற தன்மையையும் தண்டனையின்மையையும் தொடர்ந்தும் உருவாக்கி வருகின்றது, தமிழர்களைத் தொடர்ந்தும் ஒடுக்கி வருகின்றது எனவும் பேர்ள் தெரிவித்துள்ளது.
இது காணி அபகரிப்பு துரிதமாக இடம்பெறுவதற்கும் வடக்கு – கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கல் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
அத்துடன், சமீபத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை நீதியும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகும் வரை கடந்தகாலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் மன உளைச்சலை கொடுக்கும் என்பதை நினைவூட்டுகின்றது எனவும் பேர்ள் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் சமீபத்தைய அறிக்கை அதன் முடிவுகள் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துள்ளது.
இலங்கையின் குற்றவாளிகளை பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேசமயமாக்கப்பட்ட பொறிமுறைகளை பயன்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
-tw