தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை

கொழும்பில் மருதானை பிரதேசத்திற்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் மருதானையில் உள்ள சி.எஸ்.ஆர் எனப்படும் சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செயற்பட்டிருந்தன.

எனினும் இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், இன்று சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது அதிகளவான காவல்துறையினர் அங்கு பிரசன்னமாகியிருந்ததுடன், தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை காவல்துறையினரின் அருட்தந்தை சத்திவேலிடம் காண்பித்துள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வருகைதருவோரை கைது செய்துகொண்டு செல்வதற்கும் காவல்துறையினர் பேருந்தை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இதன்போது அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலுடன் காவல்துறையினர் முரண்பட்டிருந்ததுடன், தியாகி திலீபன் தொடர்புபட்ட ஊடக சந்திப்பை நடத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.

அவ்வாறு மீறி திலீபன் தொடர்பான ஊடக சந்திப்பை நடத்தினால், கைதுசெய்ய நேரிடும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வேறு வகையில் ஏற்படவிருந்த பாரிய பிரச்சினையையும் தாம் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ள காவல்துறையினர், நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவையும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலிடம் வழங்கியுள்ளனர்.

புத்த தர்மத்தின் அடிப்படையில் புத்த பெருமானின் வழியை இறுதித் தருணத்தில் கடைப்பிடித்த திலீபனின் இறுதி வாழ்க்கை காலம் தொடர்பாகவும் நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாட எதிர்பார்த்திருந்த போதிலும் அதற்கு எதிராக  நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தாம் மதிப்பளித்து செயற்படுவதாக அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

 

 

-ib