இலங்கைக்கும் மெட்டாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துக்கூறினார்.

அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்றக் குழு மீளாய்வின் போதும் இந்த சட்டமூலம் தொடர்பில் மேலதிக திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப துறை மேம்பாட்டிற்கான இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரிவாக விளக்கமளித்தார்.

செயற்கை நுண்ணறிவு துறையில் இலங்கையும் மெட்டா நிறுவனமும் சாதகமான பங்குதாரர்களாக செயற்படுவது தொடர்பில் ஆராயவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் அபிவிருத்திக்காக மெட்டா நிறுவனத்துடன் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை உருவாக்கவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பில் தரவுகளை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அதேவேளை கல்விதுறை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி இந்நாட்டு செயற்கை நுண்ணறிவு துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட இரு விடயங்கள் தொடர்பில் தான் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முதலீட்டுச் சபை தலைவர் தினேஷ் வீரக்கொடி, சர்வதேச அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

-an