சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளின்கின் உறுதிசெய்ய வேண்டுமென, அந்நாட்டின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கையில் அரச படைகள் மற்றும் இதர அரச அமைப்புகளால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரமன சித்திரவதைகள் குறித்து தமது கடித்தத்தில் அவர்கள் விபரித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற மக்களவையில் பென்சில்வேனியா மாநிலத்திலிருந்து தெரிவான ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சம்மர் லீ அம்மையாரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சரவதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி நடந்து கொண்டது ஆகியவற்றிற்கு இலங்கையை முறையாக குற்றஞ்சாட்ட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களை அவர்களது கடிதம் விரிவாக விபரிக்கிறது.
ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான தீர்மானத்தின் கீழ் இலங்கை மீது அமெரிக்க வெளிவிவகார அமைச்சு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“எமது அபிப்பிராயத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றை காரணம் காட்டி தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பதானது அமெரிக்கா கடைபிடித்து வரும் மனித உரிமைகள் மற்றும் அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கு எதிரானதாகும், அது நிலை நிறுத்தபப்ட வேண்டும்” என்று அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.
ஷெல் தாக்குதல்கள்
இலங்கை அரசும் அதன் இராணுவமும் பாரிய சர்வதேச குற்றங்களை இழைத்துள்ளதாக, அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“இலங்கை அரசும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நம்பத்தகுந்த வகையில் பாரியளவில் சர்வதேச குற்றங்களைச் செய்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை, இலங்கை இராணுவம் திட்டமிட்டு- வேண்டுமென்றே தமிழ் பொதுமக்கள் மற்றும் சிவிலியன் நிலைகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியது.
அதிலும் மருத்துவமனைகள் மற்றும் அரசால் போர் நிறுத்த வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இத்தாக்குதல் இடம்பெற்றது”.
“இலங்கையின் அரச படைகள் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் யுவதிகளை- அவர்களை கொலை செய்வதற்கு முன்னரோ அல்லது அதற்கு பிறகோ- பாலியல் பலாத்காரம் மற்றும் வன்புணர்ச்சி செய்தனர்”.என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கடிதத்தில் இலங்கை இராணுவம் செய்த பாலியல் துஷ்பிரயோகங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-tw