இனவாத பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள்

இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கிய இனவாத பிரச்சனைகளை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை தற்போது இல்லாமல் போயுள்ளமைக்கும் இனவாத நோக்கத்துடன் செயல்படும் சில அரசியல்வாதிகளே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களை நான் மதிக்கிறேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நான் மதிக்கிறேன். அவர் மற்றும் அவரது உறவினர் ஒருவருடன் நான் நெருங்கி செயல்பட்டுள்ளேன்.

இவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை நான் முழுமையாக எதிர்ப்பதோடு, அவர் உயிரிழந்ததை நினைத்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

அவர் மிக சிறந்த வகையில் வடக்கு – கிழக்கில் தமது ஆட்சியை முன்னெடுத்திருந்தார். அவரால் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்திருக்க முடியும். அவர் அந்த திறமையை கொண்டிருந்தார்.

அவர் உயிருடன் இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யாசகர்கள் இருக்கவில்லை. திருட்டு சம்பவங்களும் இடம்பெறவில்லை. பெண்கள் இரவிலும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலையை அவர் உருவாக்கியிருந்தார்.

சிறந்த ஆட்சி முறையை அவர் பின்பற்றியிருந்தார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை கொன்றது தவறான காரியம். சமாதானமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம்.

இனவாதத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். இனவாதத்தை சிலர் துஷ்பிரயோகப்படுத்துகிறார்கள். இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டர்கள். அதனை தமிழ் அரசியல்வாதிகளும் செய்ய மாட்டார்கள்.

 

 

 

 

-tw