நீதிபதி சரவணராஜா விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(06.10.2023) இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சட்டவாட்சியை பாதுகாக்க நீதித்துறைச் சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கி நின்றனர்.

நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் அரசாங்கம்

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை நீதித்துறைக்கு எதிராக விடப்பட்ட சவாலாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். என இலங்கை திருச்சபையின் யாழ் குரு முதல்வர் செல்வன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நீதித்துறைக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கிறது இந்த அச்சுறுத்தலை நாங்கள் நிராகரிக்க வேண்டும், அதனை நாங்கள் எதிர்க்க வேண்டும் அப்போதுதான் ஜனநாயகத்தோடு வாழலாம்.

இலங்கையிலே நீதித்துறையிலே இப்படிப்பட்ட அச்சுறுத்தல் வந்தது இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் இதேபோன்று எங்களுடைய வாழ்க்கையில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அரசியல்வாதிகள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சமூக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள், சாதாரண மக்கள் கூட நீதி நியாயம் கதைத்தால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் இந்த சூழ்நிலையில் தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு தெரியும் நாடாளுமன்றத்தில் இப்போது சட்டமூலங்கள் வருகின்றன பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அத்தோடு நிகழ்நிலை காப்பு சட்டம் மூலம் இவையெல்லாம் ஊடகத்துறையை கட்டி போடவும், உண்மை நீதி வெளியில் வராமல் இருக்கத்தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன, இவற்றையெல்லாம் பார்த்து நாங்கள் அமைதியாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஆகவே நாங்கள் வடக்கு கிழக்கு கடந்து முழு இலங்கையாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும்.

 

 

 

 

-wt