இஸ்ரேல் நாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு நாட்டு அரசும் இணைந்து புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது, இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் பணி புரியும் இங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு தூதரகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இஸ்ரேலில் இலங்கையர்கள் தொழில் புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சினை நேர்ந்தால் அவர்கள் 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொழில் புரியும் இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கெனவே தூதரகத்தில் இரண்டு அதிகாரிகள் முழுநேர கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இஸ்ரேலில் இருக்கும் இலங்கை உறவுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இலங்கை உறவுகளின் பாதுகாப்பு தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு 1989 என்ற இலக்கத்துக்கு தொடர்புகளை மேற்கொண்டு தேவையான தகவல் தொடர்பான புகார்களை வழங்கினால், தூதரகம் ஊடாக அது தொடர்பான தகவல்களை கேட்டறிந்து உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.