இந்து சமுத்திரத்தின் பங்களிப்பு முக்கியமானது: ஜனாதிபதி ரணில்

ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எமக்குரிய கலசாரம், வர்த்தகம் மற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படும் நாகரிக பாரம்பரியத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்கவோ துடைத்தெறியவோ முடியாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலி ஜெட்வின் ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்ற “காலி கலந்துரையாடல் 2023” சர்வதேச மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்முறை “இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்கு முறை” தொனிப்பொருளின் கீழ் 11 சர்வதேச அமைப்புகள் மற்றும் 44 நாடுகளின் சமுத்திரவியல் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை பிரதானிகளின் பங்கேற்புடன் நேற்றும் இன்றும் (13) இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக, 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலி கலந்துரையாடல் சமுத்திரவியல் மாநாடு இம்முறை 11 ஆவது தடவையாக இடம்பெறுகின்றது.

இதனூடாக வலயத்தினதும் உலகத்தினதும் தலைவர்களை ஒரே மேடைக்கு வரவழைத்து கடற்படை, சுற்றாடல்,சமுத்திர மற்றும் அரசியல் கலந்துரையாடல்களை ஏற்படுத்தல் மற்றும் உலக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டினை இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் அண்மை காலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைத்தன் பின்னர் நடத்தப்படும் முதலாவது மாநாடாக இது அமைந்திருக்கிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இந்த காலி கலந்துரையாடலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய துறைகள் தொடர்பில் பங்குபற்றியுள்ள உங்கள் அனைவரினதும் கருத்துக்களை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

இந்திய சமுத்திர மாநாட்டின் முன்னோடியான கலாநிதி ராம் மஹாதேவ் அவர்களும் இங்கு இருக்கிறார். அதனால் போட்டித்தன்மையின் ஒரு பகுதியாக அல்லாது, ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியாவின் பின்புலத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போது நாம் இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் புதிய ஒழுங்குமுறை தொடர்பில் கலந்துரையாடுகிறோம். குறிப்பாக கலாநிதி மஹாதேவ் அவர்களின் உரையின் பின்னர் இந்திய சமுத்திரம் என்பது யாது? ஆசிய – பசுபிக், இந்து – பசுபிக் மற்றும் ஒரே தடம் – ஒரே பாதையுடன் உள்ள தொடர்பு குறித்து கேள்விகளை கேட்க நினைத்தேன்.

ஆசியா – பசுபிக் என்பது ஒருவகை சித்தரிப்பாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பசுபிக் வலயத்திற்குள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் கேந்திர நிலையம் மற்றும் கலந்துரையாடல் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சீனா உட்பட ஏனைய நாடுகள் ஒன்றிணைந்து ஆசிய – பசுபிக் பொருளாதாரத்தை கட்டமைத்தலே இதன் ஆரம்பமாகும். அது பொருளாதார எழுச்சி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

-an