நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை: உயிர் அச்சுறுத்தலும் இல்லை

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை.

அத்துடன் இந்த நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்று நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி அதில் உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு மன அழுத்தம் இருப்பது வழமை. மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.

நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன அழுத்தம் உள்ளது. நாடாளுமன்றம் வரும் எமக்கும் மன அழுத்தம் உள்ளது. சபாபீடத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன அழுத்தம் உள்ளது. அவ்வாறானால் அவரும் பதவி விலக நேரிடும்.

தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாகப் பதவி விலகுவதாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும் அது எந்த வகையானது, யாரால் விடுக்கப்பட்டது என்பது தொடர்பிலோ, தனக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகையான மன அழுத்தம் என்பது தொடர்பிலோ எதுவுமே குறிப்பிடவில்லை.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்க முடியும். பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்க முடியும். அந்த அதிகாரம் எமக்குக் கூட இல்லை.

ஆனால், அந்த நீதிபதி எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. நீதிபதியின் பதவி விலகல் மற்றும் அதற்கு அவர் குறிப்பிட்ட காரணிகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டது.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு எனக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். நீதிச்சேவை ஆணைக்குழு மூன்று விடயங்களை அறிவுறுத்தியுள்ளது.

முதலாவதாக, நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி என்று பதிவிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய உயிர் அச்சுறுத்தல் அல்லது மன அழுத்தம் தொடர்பில் அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கோ, ஆணைக்குழுவின் செயலாளருக்கோ, நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கோ அல்லது தன்னுடன் இணக்கமாகச் செயற்பட்ட தரப்பினருக்கோ எவ்விதத்திலும் அறிவுறுத்தவில்லை.

இரண்டாவதாக, நீதிபதி சரவணராஜாவை பிரதிவாதியாக்கிப் பெயர் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விவகாரம் தொடர்பில் நீதிபதி சரவணராஜா 2023.09.23 மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதியில் நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

 

 

-tw