பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள மருத்துவ உதவிகள்

பங்களாதேஷால் நாட்டுக்கு வழங்கப்படவுள்ள 58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவி எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறவுள்ளது.

அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அவற்றுள் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளித்து இந்த மருந்தை நன்கொடையாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வாக இரு நாடுகளுக்கும் இடையில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பான நீண்டகால வேலைத்திட்டத்தை அரச மட்டத்தில் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியுள்ளார்.

 

 

 

-an