தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதாவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது.

ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் சிங்கள ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

தமிழ்த்தேசியக் கட்சிகள்

சர்வதேசத்தின் வார்த்தையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் “நல்லிணக்கம்” என்பதை வெளிப்படுத்த பதின்மூன்று 2009 இற்குப் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

ஆனால் அவர்கள் பதின்மூன்றைக்கூட எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்? இப் பின்னணி இந்தியாவுக்கு நன்கு தெரியும். அமெரிக்காவுக்கும் இது புரியும்.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை அல்லது ஒற்றுமையில்லை என்று கூறுகின்ற இந்தியா, சிங்கள ஆட்சியாளர்களின் விரும்பத்திற்கு அமைவாகவும் தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கிலும் செயற்பட்டு வருகின்றது.

இருந்தாலும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்தலாம் என்று விளக்கமளித்துத் தமக்கு விசுவாசமான ஒரு சில தமிழர்களைப் பயன்படுத்தி அவர்கள் ஊடாக இந்தியத் தூதரகம் படாதபாடுபடுகின்றது. துணைத் தூதரகம் இதற்கான ஏற்பாட்டைச் செய்கிறது.

வடக்குக் கிழக்கில் பலமான சிவில் சமூக அமைப்புகள் இல்லை. சில சிவில் சமூக அமைப்புகள் ஏதோ சில அரசியல் கட்சிகளின் பின்னால் செல்கின்றன. இந்தப் பலவீனங்களை அறிந்து புதிய முயற்சி எடுப்பதாகக் கூறிக் கொண்டு வேறொரு திசைக்கு தமிழர் அரசியல் விடுதலை விவகாரம் இழுத்துச் செல்லப்படுகின்றது போல் தெரிகிறது.

வடக்குக் கிழக்கில் இந்திய அரசியல் – பொருளாதார நலன்கள் என்ற அடிப்படையில் மாத்திரம் இயங்குவதற்கான கருத்திட்டங்கள் துல்லியமாக வகுக்கப்படுகின்றன. இதற்கான துரும்புச் சீட்டுதான் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற கதை.

சீனத் திட்டங்கள்

கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களப் பகுதிகளில் சீனத் திட்டங்கள் ஏற்கனவே வியாபித்துள்ள நிலையில், தற்போது வடக்குக் கிழக்கிலும் சீனா தனது திட்டங்களை விஸ்தரித்து வருகின்றது.

இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கடந்து வேறு கோணத்தில் அரசியல் பொருளாதார வியூகங்களை இந்தியா வகுக்க ஆரம்பித்துள்ளது எனலாம். இதற்கேற்ப தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் காரணம் என்பதை ஈழத்தமிழர்கள் பலமாக நம்ப வேண்டும் என்ற வியூகத்திலும் இந்தியத் தூதரகம் காய் நகர்த்துகின்றது.

இதற்காக இரு வகையான அணுகுமுறைகள் மிகச் சமீபகாலமாகக் கையாளப்பட்டு வருகின்றன. ஒன்று, தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது முழுமையாகக் குற்றம் சுமத்திவிட்டு இந்திய நலன்களுக்கு ஏற்ற முறையில் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மாற்றியமைப்பது.

இரண்டாவது, சிங்கள மக்கள் கோபப்படாத முறையிலும் சிங்கள மக்கள் இந்தியா மீது வெறுப்படையாமலும் நோகாத அரசியல் ஒன்றைச் செய்யும் முயற்சிகள்.

2009 இன் பின்னரான சூழலில் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று இந்திய – இலங்கை அரசுகள் கூட்டாகக் குற்றம் சுமத்தி வருகின்றனமைகூட ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மலினப்படுத்தும் உத்திகள் என்பதும் பகிரங்கம்.

ஈழத்தமிழர்கள்

தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒருமித்த குரலில் நிரந்தர “அரசியல் தீர்வுக்கான திட்டங்கள்” “பொறிமுறைகள்” இல்லை என்பது உண்மைதான். ஆனால் பதின்முன்றை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகள் தான் தடையாக இருக்கின்றன என்ற பிரச்சாரம் திசை திருப்பும் அரசியல் உத்தி.

அதேநேரம் மாகாண சபைகளுக்கான பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது என்றும் சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் அதிபர் ரணில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த யூன் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

கடிதத்தில் மகாநாயக்கத் தேரர்களின் ஒப்புதல் வாக்குமூலமும் இருந்தது. அது மாத்திரமல்ல பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய பேராசியர் ரொகான் குணரட்ன கடந்த ஆண்டு இலங்கை இராணுவத்தின் சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

பதின்மூன்றை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதே அதிபர் ரணிலின் நோக்கம் என்ற தொனியில் மூத்த இராஜதந்திரி தயான் ஜயதிலக கடந்த வருடம் டிசம்பர் மாதம் த ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

 

-tw