பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படும்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உதவித்தொகை உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இதனை இன்று கொழும்பு சௌமியபவானில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்

இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு, தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையிலும், வாழ்க்கை செலவுப் புள்ளியின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில், பெருந்தோட்ட தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சு அலட்சிய போக்கை காட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் காலத்தில், நேரடியாக பெருந்தோட்ட முதலாளிமார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

இதன்போது, முதலாளிமார் சம்மேளனம், இணக்கம் ஒன்றுக்கு வர மறுத்தால், காங்கிரஸ் தமது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் என்றும் அவர் இன்றைய செய்தியாளர்  சந்திப்பின் போது தெரிவித்தார்.

 

 

-ad