பசுமை வலுசக்தி பயன்பாடு : இலங்கையின் நோக்கத்தை வெளிப்படுத்திய ரணில்

காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் போதும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் போதும் பசுமை வலுசக்தியை அதிகளவில் பயன்படுத்திக்கொள்வதே இலங்கையின் நோக்கமாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வலுசக்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார காரணிகள், விலை மற்றும் நீண்ட கால தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆழமான தெரிவுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, அந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வலுசக்தி மாற்றத்துக்கான சட்டம் மற்றும் பல் நிபுணத்துவக் குழு என்பவற்றை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (21) ஆரம்பமான இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாடு – 2023 இல் கலந்துகொண்டிருந்த போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைப் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID உதவியுடன் “கிரீன்ஸ்டேட்” பசுமை வலுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மாநாட்டில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை தேசிய ஹைட்டஜன் வழிகாட்டல் வரைவு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைப் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) மற்றும் “கிரீன்ஸ்டேட்” ஹைட்ரஜன் இந்திய நிறுவனம் ஆகிவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு அடிப்படையிலான முயற்சியாக அமைவதோடு, ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID இன் உதவியுடன் இலங்கையின் வலுசக்தி மாற்றத்துக்கான பாதையை உருவாக்கும் நோக்கில் மேற்படி வழிகாட்டல் வரைவு முன்மொழியப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுகளுக்கான அறிக்கையில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமைக்கு கவலை தெரிவித்த அதிபர், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன், காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் வலியுறுத்தினார்.

பெருமளவில் கைத்தொழில்மயமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றாடல் மாசடைதல் குறைந்த அளவில் காணப்பட்டாலும், அதனை பொருட்படுத்தாமல் மேற்படி விடயத்திற்காக முன்வந்துள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

-ib