இந்திய இழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடை செய்யகோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அவர்கள் இந்தியன் இழுவைமடிப்படகின் எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்தொழிலைத் தடுப்பதற்கான மனுவொன்றை மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்த மனுவில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளதாவது,

“முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களாகிய நாம் கடந்த பத்து வருடங்களாக இந்திய இழுவைமடிப்படகு கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்தொழில் தொடர்பாக கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஐயாவிற்கும் தங்களுக்கும் பல தடவைகள் நேரடியாகவும் எழுத்து மூலமும் தரப்பட்ட மனுக்களுக்கு  அமைச்சரதும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதனைத் தங்களுக்கு இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்தியன் இழுவைமடிப் படகுகளின் எல்லைதாண்டிய சட்டவிரோத கடற்தொழிலை மேற்கொள்வதால்: எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிப்படைந்த நிலையில் வாழ்வா சாவா எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது கடல்வளமான மீன் பெருக்கத்திற்கு உதவும் பவளக்கொடிகள் மற்றும் பிற கடல்வளங்களும் அழிவடைந்த நிலையில் உள்ளது. எமது எதிர்காலச் சந்ததியினரை ஒழிப்பதற்காக பெருமளவான கேரளக் கஞ்சா போன்ற உயிரைக்கொல்லும் சட்டவிரோத போதைவஸ்து வகைகளையும் இங்கே அவர்கள் கொண்டுவந்து எமது சந்ததியினரை அழிக்கின்ற தீயசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

மனு கையளிப்பு

மேலே குறிப்பிடப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடருமானால் நாம் எமது கடலையும் கடல் வளத்தினையும் மற்றும் வாழ்வாதாரத்தினையும் இழந்து யாருமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து சாவதைவிட எமக்கு வேறு வழியில்லை.

ஆகவே இனியும் தாங்கள் தாமதிக்காது இச்சட்டவிரோத செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமானவர்களுக்கு கட்டளையிடும்படியும், நாம் தங்களிடம் கேட்டுக்கொள்வதற்கு தங்களுக்கு தார்மீகப் பொறுப்பு உண்டென்பதையும் இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்”என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மனுவின் பிரதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம்,கொழும்பு- இந்தியத் தூதரகம், யாழ்ப்பாணம் கடற்படைக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி, கிழக்கு மாகாண மாவட்டச்செயலாளர், கச்சேரி முல்லைத்தீவு ,கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் – முல்லைத்தீவு மாவட்டம் ஆகியோருக்கான மனுக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்ரன் அவர்களிடமும் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களிடத்திலும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-ib