நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தைப் பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று (25) பிற்பகல் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். சில பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வரவில்லை எனவும், ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தமக்கு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அவ்வாறு ஏற்றுக்கொண்ட நாட்டை சரியான திசையில் கொண்டு சென்று பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து 5 வருடங்கள் சென்றாலும் மீட்க முடியாது என எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறினாலும், 16 மாத குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க முடிந்திருக்கும் எனவும்
ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை பாராட்டிய பிரதேச அரசியல் பிரதிநிதிகள், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.