இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கில்லையா ?

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மாவீரர் தின இறுதி நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2023) இடம்பெறவுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்ட அழைப்பு கட்டளை தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

“மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை எவ்வாறாயினும் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பலதரப்பட்ட  நிலையங்களில் இருந்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.

பல நீதிமன்றங்களில் இருந்து தீர்ப்புகள் வந்த பின்னும் ஒவ்வொரு பிரிவுகளிலும் வழக்குகள் தொடர்ச்சியாக செயற்பாட்டாளர்கள் மீதும் விதிக்கப்படுகிறது.

நாளைய தினம் மாவீரர் நினைவு நாள். அந்த நாளிலும் காலையில் கூட எனது கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் தீவிர செயற்பாட்டாளருமான விஜயராச மற்றும்  மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் பவானந்த சர்மா ஆகியோர் இவ்வாறு பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது ஊர்காவற்றை நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்டதல்ல. பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட அழைப்பாக காணப்படுகின்றது. இது தொடர்பாக நான் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவுடன் கலந்துரையாடினேன். எவ்வாறாக இருப்பினும் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கே மிக முக்கியமான விடயம் காலங்காலமாக இந்த பொலிஸார் தமிழர்களுடைய நினைவு கூறுகின்ற உரிமைக்கு எதிராக வழக்கினை பதிவு செய்து வருகின்றார்கள்.

ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தினை நாடுவது பொலிஸாரினுடைய வழமையான செயற்பாடாக தான் இருந்து வருகிறது. இவர்கள் நீதிமன்றம் சென்று வந்த பின்னரே மாவீரர் தின நினைவேந்தலை காரைநகரில் முன்னெடுக்க முடியுமா இல்லையா என்பது தெரியவரும். இவ்வாறாக இவர்களுடைய நேரம் காலத்தினை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் செலவழிக்க வைத்துள்ளார்கள்.

இங்கு யாரும் எவரும் ஆயுதம் ஏந்தியவர்களுக்காக நினைவேந்தல் செய்வதாக சொல்லவில்லை. அவர்கள் மாவீரர்கள். அவர்கள் இறந்த பின்னர் உறவுகளினால் அஞ்சலிக்கப்படுகின்றார்கள். உலகத்தின் எந்த ஒரு இனமாக இருந்தாலும் இறந்தவரை நினைவு கூறுவது வழமையான வடிவமாக இருக்கின்றது.

ஆகவே இவ்வாறனவர்களினுடைய பெற்றோர்கள் நினைவேந்தலை மேற்கொள்ள முடியாது என்றால் இது எந்த நாட்டில் நடக்கின்றது? பொலிஸாராக அல்லது ஜனாதிபதியாக இருக்கலாம். அல்லது இந்நினைவேந்தலுக்கு எதிராக கதைத்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். இதே இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதனை சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டினுடைய பெரும்பான்மை இனமாக இருக்கக்கூடிய சிங்கள இனம் நியாயத்தை முதலில் கேட்க வேண்டும்.

நாங்கள் அதிகார பகிர்வு பற்றி கதைக்கின்றோம். இந்த அதிகார பகிர்விற்காக தான் போராடினோம். அடிப்படையில் நியாயமான முறையில் தான் நாம் ஒவ்வொன்றிணையும் கேட்டோம் கேட்டவர்கள் திட்டமிட்டு மௌனிக்கப்பட்டார்கள்.

இப்பொழுது இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமையை கூட தடை செய்கின்றார்கள். இங்கே அதிகார பகிர்வின் மூலம் தமிழ் பேசும் பொலிஸார் இங்கே இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த உணர்வு புரிந்து இருக்கும். உணர்வுகள் புரியாமல் இருக்கின்ற ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் உடைய உணர்வுகளை சிதறடிக்கின்றார்கள் மழுங்கடிக்கின்றார்கள். இதை யாராலும் இது மன்னிக்க முடியாது ”என தெரிவித்துள்ளார்.

 

-tw