அதிபர் ரணிலின் வாக்குறுதிகள் நடைமுறை சாத்தியமற்றது

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல கற்பனை கதைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (29.11.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் உள்ள 50 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் பொய்யானது.தனது சகாக்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசியல் வாக்குறுதி.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் இல்லை. 14512 வீடுகள் மாத்திரமே உள்ளன.

மீதுன்செவன குடியிருப்புத் திட்டத்தில் 500 குடியிருப்புகளும், லக்முது செவன குடியிருப்பு திட்டத்தில் 118 குடியிருப்புகளும், மெதத்செவன குடியிருப்புத் திட்டத்தில் 430 குடியிருப்புகளும் உள்ளடங்களாக 24 குடியிருப்பு செயற்திட்டத்தில் 14512 குடியிருப்புகள் உள்ளன.

முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாஸ வழங்கியுள்ள குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்க முடியாது,ஏனெனில் உரிய காணிகளுக்கு முதல் உரிமையாளர் இல்லாத நிலையில் உறுதிப்பத்திரம் வழங்க முடியாது. இதுவே உண்மை.

50 ஆயிரம் பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்குவதாக அதிபர் குறிப்பிட்டவுடன் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு தொகுதிக்கு சென்றேன். அப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 30 வருடகாலமாக வாடகை மற்றும் வரி செலுத்தி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஒருசிலர் இரண்டாம் தர உரிமையாளர்களாக உள்ளார்கள். புதிய குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதாக அதிபர் குறிப்பிடுகிறார்.

ஆனால் கொழும்பு மாவட்டத்தில் பெருமளவான வீட்டுதொகுதி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஆகவே அதிபரின் வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது. கற்பனை கதைகளை அழகாக குறிப்பிடுவதில் அதிபர் திறமையானவர் என்பதை பொதுஜன பெரமுனவினர் அறியாமல் இருக்கலாம், நாங்கள் நன்கு அறிவோம்.

கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 14,512 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்ட 12,360 பேருக்கு குடியிருப்பு உறுதிப்பத்திரம் வழங்குவதாக இருந்தால் அதற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எம்மை காட்டிலும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவே கடன்பட்டுள்ளார். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை தொடர்ந்து அவர் ஏமாற்றினார்.

அதற்கான பாடத்தை கொழும்பு மாவட்ட மக்கள் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கற்பித்தார்கள்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு உரிமை வழங்குவதாக பொய்யான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சாகல ரத்நாயக்க,ரவி கருணாநாயக்க ஆகியோர் முடிந்தால் எம்முடன் போட்டி போட்டு தேர்தலில் வெற்றியடையட்டும்.” என்றார்.

 

 

-tw