மீண்டும் சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம்

கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி நாட்டின் மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த ஆண்டு தமிழ் மாவீரர் தினத்தில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்திய வேளையில், இலங்கை அரச பாதுகாப்புப் படையினர், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று போரில் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூருகின்ற நிலையில், கடந்த வாரத்தில் மாத்திரம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம் 2023 டிசம்பர் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 2.30 – 4.00 மணி வரை (இலங்கை நேரப்படி இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை) நடைபெறவுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தலைமையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய விரிவான விளக்கக் குறிப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது இராணுவம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், அன்றிலிருந்து இலங்கையின் ஏனைய உலக நாடுகளுடனான வெளிநாட்டு உறவுகள் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் குற்றங்களை இழைத்தமை குறித்த ‘நம்பகமான குற்றச்சாட்டுகள்’ இருப்பதாக 2011 ஏப்ரலில் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டிருந்தது.

போரின் இறுதிக்கட்டத்தில், அப்போது ஆட்சியில் இருந்த இலங்கை அரசு, இராணுவம் மற்றும் சிவில் அரசுக்கு எதிரான பல குற்றச் சாட்டுகளை மறுத்ததுடன், தமிழ் இராணுவம் பொதுமக்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தியதாக வாதிட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகித்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் முன்னணி நாடாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை தொடர்பில் தமது வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எம்.பி.க்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளன.

வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அடையாளம் கண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் 32 ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகளில்’ இலங்கையும் ஒன்றாகும்.

ஜூலை 2023 இல் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றிய FCDO இன் வருடாந்த அறிக்கையானது, இலங்கையில் தமிழர்களும் சிறுபான்மை மதக் குழுக்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

 

 

-tw