இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் சரிவு

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகத் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்காக குறித்த திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் தொடர்பான தரவு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இவ்வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில், பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 68 ஆயிரத்து 920 ஆகக் குறைவடைந்துள்ளது.

ஆனால், 2022 ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரத்து 321 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேநேரம், 2021 ஆம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 84 ஆயிரத்து 848 ஆகவும், 2020 இல் 3 இலட்சத்திற்கும் அதிகமான பிறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6 ஆயிரத்து 401 ஆக குறைவடைந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41 ஆயிரத்து 786 பிறப்புகள் குறைந்துள்ளன.

இந்நிலையில், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

-ib