பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு துளியளவும் அனுபவம் இல்லை

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பத்தையும் அதற்கான தீர்வுகளையும் இதுவரையில் உணரவில்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உத்தர லங்கா சபாவின் தலைமையகத்தில் நேற்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அடுத்த வருடத்திலிருந்து வட் வரியை இரு முறைகளில் மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது வரையில் 8 சதவீதத்திலிருந்து 12 வீதத்துக்கும் அதிலிருந்து 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள வட் வரியை அடுத்த வருடத்தில் 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

மறுபுறம், இதுவரையில் வட் வரி அறிவிடப்படாத பொருட்களில் சில அத்தியாவசியப் பொருட்களை தவிர ஏனைய சகலவற்றுக்கும் வட் வரி அறவிடப்படும். இதில் குறிப்பாக நீர், மின்சாரம் மற்றும் எரிபொருளுக்காகவும் வட் வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை செய்யாமல் இருக்க முடியாது. விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்தே ஆகவேண்டும் என்று அரசாங்கம் தர்க்கம் செய்கிறது.

ஆனால், இது முழுமையாக பொய்யான தர்க்கமாகும். நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் எந்தவொரு இடத்திலும் வட் வரியை 18 சதவீதத்தால் அதிகரிக்குமாறு குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை வட் வரியை 18 சதவீதமாக அதிகரிக்குமாறு இந்த ஒப்பந்தத்தின் எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் திறைசேரியின் அதிகாரிகளுக்கும் சவால் விடுகிறேன்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியாகும் போது அரச வருமானம் அல்லது வரி வருமானம் 650 பில்லியன் ரூபாய் வரையில் அதிகரித்திருக்க வேண்டும் என்றும் ஜூலை 31 ஆம் திகதியாகும் போது வரி வருமானத்தை 1300 பில்லியன் ரூபாயாக அதிகரித்திருக்க வேண்டும் என்றும் வருட இறுதியில் 2500 பில்லியன் ரூபாயாக அதிகரித்திருக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு வருமான இலக்குகளை வழங்கியிருந்தது.

இந்த இலக்குகள் அடையப்படவில்லை. டிசம்ரின் முதல் வாரத்தை சந்தித்துள்ளோம். ஆனால், இதுவரையில் இரு இலக்கையும் நிறைவு செய்யவில்லை. வட் வரியும் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்படும் வருமான வரியும் முறையாக அறவிடப்பட்டுள்ளது.

வருமான வரியினூடாக 100 பில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது வரையில் அதிலும் பார்க்க 120 பில்லியன் ரூபாய் சேகரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாரிய நிறுவனங்கள், செல்வந்தர்களிடமிருந்து பெறவேண்டிய வருமான வரியே இலக்கின் அடிப்படையில் சேகரிக்க முடியாமல் போயுள்ளது.

இந்த விடயத்திலேயே தவறு இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவினரின் வரியை அறவிடாமலிருப்பதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைப்பதாலேயே அரசாங்கத்தால் அதன் வரி இலக்குகளை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடைவெளியை நிறப்புவதற்காக மீண்டும் அப்பாவி மக்கள் செலுத்தும் வட் வரியை மூன்று சதவீதத்தால் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களுக்காக வட் வரியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் ஏன் ஒரு நாட்டில் நீர், மின், எரிபொருளுக்கான வட் வரி அறவிடப்படுகின்றது என்றால், ஒரு பொருள் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானவையாகும். இதனைவிட பாரதூரமான பிரச்சினை என்றால் தற்போதையளவில் இலங்கையின் மின் கட்டணம் இலங்கையில் அதிகளவான கட்டணமாக மாறியுள்ளது.

அதன்காரணமாக தொழில் துறையில் செலுத்தப்படும் மின் கட்டணமும் சிங்கப்பூரிலுள்ள மின்கட்டணத்துக்கு சமமானது என்றதால் இலங்கையிலுள்ள சிறியளவான தொழிற்சாலை உரிமையாளர்கள் அவர்களின் தொழிற்றுறையை மூடியுள்ளதுடன் பாரியளவான தொழிற்சாலை உரிமையாளர்கள், இலங்கையிலிருந்து வியட்னாம், பங்களாதேஷ், ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அவர்களின் வர்த்தகங்களை நிறுவ ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீர், மின், எரிபொருளுக்கு வட் வரியை இணைத்தால் மீண்டும் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். அதனூடாக மீண்டும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்காக போட்டித் தன்மை சர்வதேச சந்தையில் இல்லாமல் போகும்.

ஏற்றுமதி பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திப்பதுடன், தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழில்வாய்ப்பற்ற நிலை உருவாகும். இந்த நிலைமை நீடித்தால் பொருளாதாரத்தில் மீண்டும் நெருக்கடி நிலைமை உருவாகி இந்த வருடத்தில் சேர்க்கப்பட்ட வட் வரியை கூட அடுத்த வருடத்தில் சேகரிக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பத்தையும் அதற்கான தீர்வுகளையும் இதுவரையில் உணரவில்லை. பொருளாதாரம் தொடர்பில் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு துளியளவும் அனுபவம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய இன்னுமொரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகிறோம்.

மீண்டுமொரு சமூக நெருக்கடி ஏற்படக்கூடும். இது அரசாங்கத்துக்கு புரியவில்லை என்றால் மக்களுடன் வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு புரியும் வகையில் தெளிவுபடுத்த தயாராக இருக்கிறோம்”  எனத் தெரிவித்தார்.

 

-ib