பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க தயாராகும் ஜனாதிபதி ரணில்

பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“சகல வளங்களுடன் தான் பெருந்தோட்டங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இன்று தோட்டங்கள் மூடப்பட்டுவருகின்றன. இதற்கு தொழிலாளர்கள் காரணம் அல்ல. பெருந்தோட்ட நிறுவனங்களின் வினைத்திறன் அற்ற முகாமைத்துவமே காரணமாகும்.

இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. இது போதுமானது அல்ல. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுத்து வருகின்றோம்.

தொழில் அமைச்சருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். ஒன்று கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், இல்லையேல் சம்பள நிர்ணயசபை ஊடாக அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் கூறினோம். நிறுவன தரப்பில் இரு வாரங்கள் அவகாசம் கோரப்பட்டன.

இந்நிலையில் பெருந்தோட்டக் நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி நேற்று பேச்சு நடத்தினார். குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளார். மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அவர் அதனை நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. காணி உரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

-tw