இலங்கை மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஆராய்ச்சிக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் இன்று (18) சீன தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
சீன விஞ்ஞானக் கழகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியன இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
அத்துடன், சீன விஞ்ஞானக் கழகத்தின் சார்பில், நீர் மாசுக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத் திணைக்களத்தின் இயக்குனர் டாக்டர் வெய் யுவான்சோங், மற்றும் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.
இந்த உடன்படிக்கையின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய இலங்கை-சீனா கூட்டு நீர் ஆராய்ச்சி ஆய்வகத்திற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் சீன விஞ்ஞானக் கழகம் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-ib