சீனக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை

புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் ஆய்வுகளை மேற்கொள்வதனை ஒரு வருட காலத்திற்கு நிறுத்தி வைக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் இலங்கையின் கடற்பரப்பில் மற்றுமொரு ஆய்வுக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இவ்வாறான ஆய்வு நடவடிக்கைகளின் போது இலங்கையும் சமமான பங்காளிகளாக பங்குபற்றுவதற்காக இலங்கை சில திறன் மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதனால் பிற நாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையும் அடுத்த ஆண்டு (2024) தேர்தலை எதிர்கொள்ள இருப்பதனால், புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைக் கையாள்வதில் எந்த நாட்டையும் பகைத்துக்கொள்ளாமல் செயல்பட முற்படுகிறது எனவும் அவர் கூறினார்.

 

 

 

-tw