பெல்டா குடியேற்றக்காரர்கள்: “இசா சாமாட்டை KPFB-லிருந்து விலக்கி வையுங்கள்”

Koperasi Permodalan Felda Bhd (KPFB) என்ற கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இருக்க முடியாது என மலேசிய கூட்டுறவு ஆணையத்துக்கு தெரிவித்துள்ள பல பெல்டா குடியேற்றக்காரர்கள் இப்போது அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்கின்றனர்.

இசா நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து இந்த மாதத்தில் அனாக் எனப்படும் அரசு சாரா அமைப்பு ஒன்றும் KPFB உறுப்பினர்களும் நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துக் கொள்வர்.

அந்த அனாக் அமைப்பில் பெல்டா குடியேற்றக்காரர்களுடைய குழந்தைகள் இடம் பெற்றுள்ளன.

“இசா KPFB-யின் தலைவராக இருக்க முடியாது. காரணம் அவர் அதில் உறுப்பினரே இல்லை,” என அனாக் அமைப்பின் தலைவர் மாஸ்லான்  அலிமான் மலேசியாகினியிடம் கூறினார்.

“ஆகவே வெளியில் உள்ள ஒருவர் அந்தக் கூட்டுறவுக் கழகத்துக்கு எப்படித் தலைவராக இருக்க முடியும் ?” என அவர் வினவினார்.

“இசா நியமனத்தை எதிர்த்து நாங்கள் மலேசியக் கூட்டுறவு ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம். அனைத்துலக கூட்டுறவுக் கூட்டணிக்கும் கடிதம் எழுதியுள்ளோம்,” என்றும் மஸ்லான் சொன்னார்.

புர்சா மலேசியா பங்குச் சந்தையில் பெல்டா துணை நிறுவனமான Felda Global Ventures Sdn Bhd-டை பட்டியலிடுவதற்கு KPFB ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

KPFB மலேசியாவில் மிகவும் பணக்கார கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாகும். அது பாங்க் ராக்யாட் வங்கியை விட பெரியது.

Felda Global Ventures Sdn Bhd பட்டியலிடப்பட்டால் குடியேற்றக்காரர்களுடைய உரிமைகள் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. காரணம் அது பட்டியிலடப்பட்ட பின்னர் அந்நியர்கள் உட்பட முதலீட்டாளர்களுக்கு அதில் உரிமை கிடைத்து விடும்.

அப்போது ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மலாய்க்காரர்களுக்கு உதவும் பெல்டாவின் உண்மையான நோக்கம் மேலும் கீழறுப்புச் செய்யப்பட்டு விடும் எனவும் மஸ்லான் சொன்னார்.

TAGS: