“அரசமைப்பை மீறுகின்ற எந்தச் சட்டத்தையும் செல்லாததாக்கும் உரிமை நீதிபதிகளுக்குக் கிடையாதா? என்னைப் பொறுத்த வரையில் இது அப்பட்டமான அரசமைப்பு அத்துமீறல்.”
தொகுதியில் இல்லாத வாக்காளர்களாகப் பதிவு செய்யும் முயற்சியில் வெளிநாடுகளில் வாழும் ஆறு மலேசியர்கள் தோல்வி
சரவாக்டயாக்ஸ்: தொகுதியில் இல்லாத வாக்காளர்கள் என்பதை அனுமதிக்காதது, தேர்தல் ஆணையம் (இசி) மலேசியர்களுக்கு சம உரிமை வழங்காததற்கு ஒப்பாகும். சட்டத்தின் கீழ் சம உரிமை வழங்கும் அரசமைப்பின் எட்டாவது பிரிவை அது மீறுகிறது.
கூட்டரசு அரசமைப்பே உச்ச சட்டம் ஆகும். ஆகவே தேர்தல் விதிமுறைகள் அரசமைப்பைக்கு முரணானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
ஸ்டீவன் சொங்: வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தின் 15வது பிரிவு இசி-க்கு அதிகாரம் வழங்குகிறது. அதனால் வாக்காளர் பதிவு தொடர்பில் 2002ம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறைகளைத் தயாரித்தது.
அவ்வாறு அந்த விதிமுறைகளைத் தயாரிக்கும் போது 21 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு மலேசியருக்கும் அவர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு அவர் தொகுதியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாக்குச் சீட்டு கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறும் கூட்டரசு அரசமைப்பின் 119வது பிரிவுக்கு இணங்க அது நடந்து கொள்ளவில்லை.
ஆகவே இசி 2002 விதிமுறைகள் வகை செய்த தொகுதியில் இல்லாத வாக்காளர்களாக அந்த ஆறு மனுதாரர்களும் கருதப்படுவதற்கு உள்ள அரசமைப்பு உரிமையை நிலை நிறுத்த இசி தவறி விட்டது.
மைக்கல்: எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஜனநாயக உணர்வு இல்லை என்றால் அது வேறு விஷயம். தேர்தல் ஆணைய விதிமுறைகள் எவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அரசமைப்பைக் காட்டிலும் மேலாக இருக்க முடியாது.
நீதிபதி ஒருவர் அந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முரண்பாடான தேர்தல் ஆணைய முடிவைச் சரி செய்திருக்க வேண்டும். நீதிபதி தமது விருப்பம் போல் சட்டத்துக்கு விளக்கம் அளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நாடு சட்ட ஒழுங்கு இல்லாத காடாகி விடும்.
கேகன்: வெளிநாடுகளில் வாழும் அனைத்து மலேசியர்களும் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் இசி தனது விதிமுறைகளைத் திருத்த வேண்டும். பிஎன் -னுக்கு வாக்களிக்கக் கூடிய அரசு ஊழியர்கள், அரச தந்திரிகள், அரசாங்க உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்கள் ஆகியோருக்கு மட்டும் அந்த உரிமையைக் கொடுக்கக் கூடாது.
சுயேச்சையாக இயங்க வேண்டிய இசி பிஎன் னுக்கு ஆதரவாக தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. சுயேச்சையான நேர்மையான தேர்தல்களில் தாங்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் உரிமை மலேசியர்களுக்கு கிடைக்க வேண்டும்.
அனோம்னிம்: அரசமைப்பை மீறுகின்ற எந்தச் சட்டத்தையும் செல்லாததாக்கும் உரிமை நீதிபதிகளுக்குக் கிடையாதா ? என்னைப் பொறுத்த வரையில் இது அப்பட்டமான அரசமைப்பு அத்துமீறல்.
கங்காரு: கூட்டரசு அரசமைப்பு மேலானதா, தேர்தல் ஆணைய விதிமுறைகள் மேலானதா? இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள பெரிய ஏவுகணை விஞ்ஞானி தேவை இல்லை.