“இசி, எவையெல்லாம் சாத்தியம் என்பதைக் கூறுக”, கிட் சியாங்

எம்பி பேசுகிறார்-   வெளிநாடுகளில் உள்ள எல்லா மலேசிய வாக்காளர்களுமே அஞ்சல்வழி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) அப்துல் அசீஸ் யூசுப் கூறியிருப்பது, பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளில் சிலவற்றை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்காகக் காத்திராமல் புதிய துணைச் சட்டங்கள் அல்லது சட்டத் திருத்தங்கள் மூலமாக உடனடியாக செய்திட முடியும் என்ற வாதத்துக்கு வலுச் சேர்க்கிறது.

எனவே, பெர்சேயின் எட்டுக் கோரிக்கைகளில் எவற்றையெல்லாம் உடனடியாக செயல்படுத்த முடியும் என்பதை இசி திட்டவட்டமாகக் கூறிட வேண்டும். “ஆனால்” “ஆவன்னா” என்று இழுத்துக்கொண்டிருக்கக்கூடாது.

“அஞ்சல்வழி வாக்குச் சீரமைப்பு”க்காக பெர்சே 2.0 முன்மொழிந்த பல பரிந்துரைகளில், வெளிநாடுகளில் உள்ள எல்லா மலேசியர்களுக்குமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. அது பற்றிப் பதிலளித்த இசி, அஞ்சல் வாக்குச் சீரமைப்புத் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மற்ற பரிந்துரைகள் பற்றி வாய்திறக்காமலிருப்பது ஏன்?

“அஞ்சல் வாக்குச் சீரமைப்பு” தொடர்பில் பெர்சே 2.0-இன் இரண்டாவது பரிந்துரை இது:

“நடப்பு அஞ்சல்வழி வாக்களிக்கும் முறையைத் திருத்தி அமைத்து மலேசிய குடிமக்கள் அனைவருமே வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அஞ்சல் வாக்குகள், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு மட்டும்தான் என்ற நிலை கூடாது. வாக்களிப்பு நாளில் வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க இயலாதவர்களுக்கும் அந்த வசதி கிடைக்க வேண்டும். போலீஸ், ஆயுதப்படையினரும் மற்ற அரசாங்க ஊழியர்களும் மற்ற வாக்காளர்களைப்போலவே வாக்களிக்க வேண்டும்.  வாக்களிப்பு நாளில் வேலை செய்வோருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு.

“அஞ்சல் வாக்களிப்பில் வெளிப்படைத்தன்மை தேவை. அஞ்சல்வழி வாக்களிக்கப்படுவதைக் கண்காணிக்க கட்சி முகவர்களை அனுமதிக்க வேண்டும்.”

இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயாரா என்பதை இசி அறிவிக்க வேண்டும்.

பெர்சேயின் எட்டுக் கோரிக்கைகளில் முதலாவதான “வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்தல்” என்பதையும், இசி-யால் எளிதில் நடைமுறைப்படுத்த முடியும். அதற்கு அது உண்மையிலேயே ஒரு சுயேச்சை அமைப்பாக  செயல்பட்டு தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதிப்படுத்துவதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்த பெர்சே முன்வைத்துள்ள பரிந்துரை:

“வாக்காளர் பட்டியலில், இறந்துபோனவர்கள் இடம்பெற்றிருத்தல், ஒரே முகவரியில் பலர் பதிவுசெய்யப்பட்டிருத்தல், இல்லாத முகவரிகள் எனப் பல முறைகேடுகள் நிறைந்துள்ளன.இந்த ‘ஆவி வாக்காளர்களை’ ஒழித்துக்கட்டி வாக்காளர் பட்டியலைத் திருத்தி, இற்றைப்படுத்த வேண்டும்.

“காலப்போக்கில், இயல்பாகவே வாக்காளராக பதிவாகும் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.”

இங்கு, வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்த இசி, நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்காகக் காத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. வாக்காளர் பட்டியலில், இறந்துபோனவர்கள் பெயர்கள், ஒரே முகவரியில் பலர் பதிவுசெய்யப்பட்டிருத்தல், இல்லாத முகவரிகள் போன்ற முறைகேடுகளைக் களைய முடியாதா என்ன?

குடிமக்கள் வாக்களிக்கும் வயதை எட்டியதும் இயல்பாகவே வாக்காளராகும் முறையொன்றை ஏன் இசி உருவாக்க மறுக்கிறது என்பதற்கும் சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இவை தவிர்த்து, அழியாத அடையாள மையைப் பயன்படுத்தல், தேர்தல் பரப்புரைக்குக் குறைந்தது 21 நாள்களை ஒதுக்குதல் ஆகியவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரவும் நாடாளுமன்றத் தேர்வுக்குழு முடிவுக்காக இசி காத்திருக்க வேண்டியதில்லை.

அரசமைப்பு, தேர்தல்களை நடத்தும் அதிகாரத்தையும் பொறுப்பையும் இசி-க்குக் கொடுத்தாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவெடுக்கும் பிரதமரே பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையும் நிர்ணயம் செய்கிறார் என்பதும் அதை இசியும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது என்பதும் அனைவரும் அறிந்த இரகசியம்தான்.

இது அரசமைப்புக்கு முரணானது. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், வாக்களிப்பு நாள் முதலியவற்றை முடிவுசெய்யும் அதிகாரம் இசி-க்கு மட்டுமே உண்டு.

இசி, ஆளும் கட்சிக்கு அல்லது ஆட்சி செய்யும் பிரதமருக்கு அடிபணியாமல் தன் சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டாமா?

இதன் தொடர்பில் “பராமரிப்பு அரசு” பற்றியும் ஒரு கேள்வி எழுகிறது.

“பராமரிப்பு அரசு” கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் அமையும்வரை பராமரிப்பு பிரதமர், பராமரிப்பு அரசு என்ற முறையில் “அன்றாட நிர்வாகத்தில்” மட்டுமே கவனம் செலுத்தப்படும்  அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படாது, பொதுப்பணம் தப்பாக செலவிடப்படாது என்று உறுதியளிப்பாரா?

TAGS: