மோதிய வேகத்தில் காரில் இருந்தவர்கள் வெளியே தூக்கி எறியப்பட்டனர்.
புத்ராஜெயாவில் சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இன்று மதியம் புத்ராஜெயா, பிரசிண்ட் 1-இல் (Precinct 1), பிரசிண்ட் 12-இல் உள்ள தாமான் வெட்லேண்ட் (Taman Wetland) நோக்கிச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் நால்வர் பலத்த காயமடைந்தனர்.
புத்ராஜயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாடுகளின் உதவி இயக்குநர் எம். ஹாசிக் ஹாஸ்மி, காலை 11.58 மணிக்கு NG999 வழியாக தங்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஒரு தீயணைப்பு வாகனமும், அவசர மருத்துவ உதவிக் குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு புரோட்டான் சாகா (Proton Saga) கார் நிலைதடுமாறிச் சென்று சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியதை அவர்கள் கண்டறிந்தனர். மோதிய வேகத்தில் காரிலிருந்த பல பயணிகள் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் ஆறு பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும் ஹாசிக் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், மேலும் சாலையைச் சீர் செய்வதற்காக மரங்கள் வெட்டப்பட்டன.
இன்று காலை குச்சிங்கில் உள்ள ஸ்ரீ அமான், காம்பங் செலபோங் ஜிங்காவு என்ற இடத்தில் நடந்த மற்றொரு விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் புரோட்டான் X70 (Proton X70) மற்றும் பெரோடுவா அல்சா (Perodua Alza) ஆகிய இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. இதில் அல்சா கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
புரோட்டான் X70 காரில் இருந்த 70 வயது முதியவர் மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பாதிக்கப்பட்டவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
அதே வாகனத்தில் பயணித்த மற்ற இரு பயணிகளான ஆறு வயது மற்றும் நான்கு வயது சிறுவர்கள் தலையில் காயமடைந்தனர். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஸ்ரீ அமன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில், பெரோடுவா அல்சா வாகனம் தீப்பிடித்து எரிவதற்கு முன்பு, அதில் இருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரும் சிறு காயங்களுடன் தப்பினர்.
























