ஜோஹோரில் உள்ள பெங்கராங் துறைமுகத்தில் நிரந்தர சுங்கத் துறைப் பணியாளர்கள் இல்லாதது, சிங்கப்பூர் போன்ற பிராந்திய துறைமுகங்களுக்கு எதிரான மலேசியாவின் போட்டித்திறனைப் பாதிக்கும் என்று கப்பல் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
“துறைமுக வளாகத்திற்குள் செயல்பாட்டு சுங்க அலுவலகம் (Customs office) இல்லாததும், 24 மணிநேர துறைமுக நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு அலுவலக வேலை நேரங்கள் அமையாததும், ஒவ்வொரு கப்பலின் வருகை மற்றும் புறப்பாட்டின் போதும் தொழில்துறையினர் 10 மணிநேரம் வரை கால விரயத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக மேரிடைம் நெட்வொர்க் செண்டிரியன் பெர்ஹாட் (Maritime Network Sdn Bhd) நிறுவனர் ஆர். ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.”
“பெங்கராங் துறைமுகத்திற்கான சுங்க அலுவலகம் (Customs office) இங்கிருந்து சுமார் 20 நிமிடங்கள் தொலைவில் உள்ள சுங்கை ரெங்கிட்டில் அமைந்திருப்பதுதான் முக்கியமான பிரச்சனையாகும். இது அவசரமான விஷயங்களை மேற்கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது, குறிப்பாக அலுவலக நேரம் முடிந்த பிறகு நடைபெறும் பணிகளுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது.”
சுங்கத்துறை வழக்கமான அலுவலக நடைமுறையைப் பின்பற்றிச் செயல்படுவதாலும், துறைமுக நடவடிக்கைகள் ஓய்வின்றி இயங்குவதாலும் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது.
சுங்கத்துறை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். வார இறுதி நாட்களில், சுங்கை ரெங்கிட் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
“அந்த நேரத்திற்குப் பிறகு, கப்பல் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியவர்கள் பாசிர் கூடாங் (Pasir Gudang) சுங்க அலுவலகத்திற்குத்தான் செல்ல வேண்டும். அங்கு சென்று வர நான்கு மணி நேரம் ஆகும்; இது அங்கு ஆவணங்களைச் சரிபார்க்க எடுக்கும் நேரத்தைத் தவிர்த்துச் சொல்லப்படும் கணக்காகும்.”
சுங்கை ரெங்கிட் சுங்கத் துறை அலுவலகம்
“இது கடுமையான தாமதங்களை ஏற்படுத்துகிறது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார் .
மலேசியாவின் நீண்ட ஆவணச் செயல்முறைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் ஆவதாக அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
ஒரு கப்பலின் சரக்குகளை இறக்கும் பணி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது என்றும், நமக்கு அதிகாலை 3 மணியளவில் சரக்கு விவரச் சீட்டு கிடைக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.
சுங்கை ரெங்கிட்டில் உள்ள சுங்க அலுவலகம் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதால், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக பாசிர் குடாங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
“சுங்கத்துறை விவகாரம் முடிந்த பிறகுதான், கப்பலை வெளியே அனுப்புவதற்கான வழிகாட்டியை எங்களால் நியமிக்க முடியும். இந்தச் செயல்முறைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் ஆகும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் துறைமுகத்தில் இதேபோன்ற நடைமுறைகளை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பாசிர் குடாங் சுங்கத் துறை அலுவலகம்
ஜெயேந்திரனின் கூற்றுப்படி, இந்தத் தாமதங்கள் நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், துறைமுகத்தின் செயல்திறன் மீதான சர்வதேச கப்பல் நிறுவனங்களின் நம்பிக்கையையும் பாதித்தன.
சில நேரங்களில் ஏற்படும் தாமதங்கள், காத்திருக்கும் கப்பல்களை நங்கூரமிடும் பகுதிகளுக்குத் திருப்பிவிட துறைமுக நடத்துநர்களை நிர்பந்திப்பதாகவும், அதன் விளைவாக கப்பல் பயண அட்டவணைகளில் இடையூறுகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, பெங்கராங் துறைமுகத்தில் உடனடியாக நிரந்தர சுங்க அதிகாரிகளை நியமித்து, 24 மணி நேர சேவைகளை வழங்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“அதிகாரி நியமனப் பிரச்சினைகளின் காரணமாக மட்டும் இந்த மாபெரும் துறைமுகம் போட்டியில் பின்தங்கிவிட அனுமதிக்காதீர்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.
Maritime Network Sdn Bhd நிறுவனர் ஆர். ஜெயேந்திரன்
அனைத்து துறைமுகங்களிலும் மனிதவளப் பற்றாக்குறை
இதற்கிடையில், பெயர் குறிப்பிட விரும்பாத சுங்கத்துறை வட்டாரம் ஒன்று, துறைமுகத்தில் சுங்கத்திற்கான வசதிகள் உண்மையில் உள்ளன, ஆனால் அங்கு எந்தப் பணியாளர்களும் பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
“இது, துறை எதிர்கொள்ளும் மனிதவளப் பற்றாக்குறையிலிருந்து உருவாகிறது,” என அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக, பெங்கராங் துறைமுகத்தில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைமுகங்களிலும் சுங்கத் துறையால் 24 மணி நேர செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.
தொழில்துறையில் ஏற்படும் தாக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், தற்போதைய அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு, எல்லா இடங்களிலும் முழுநேர சேவைகளைத் தொடங்குவது எங்களுக்குச் சிரமமாக உள்ளது.
“இந்தத் துறைமுகத்திலிருந்து கிடைக்கும் கூடுதல் வருவாயை, பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சேவைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என நம்புகிறோம்,” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.
ஜோஹோரின் கோத்தா திங்கியில் அமைந்துள்ள பெங்கராங், பெங்கராங் ஒருங்கிணைந்த பெட்ரோலிய வளாகத்தின் (PIPC) தளமாகும். இது பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளதுடன், நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் மேம்பாட்டு மையமாகவும் விளங்குகிறது.
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து பெறுவதற்காக மலேசியாகினி நிதி அமைச்சகத்தையும் சுங்கத்துறை தலைமை இயக்குநரையும் தொடர்பு கொண்டுள்ளது.
























