அரசு அதிகாரிகள் எனக்கூறி மோசடி: சிங்கப்பூரில் மேலும் 2 மலேசியர்கள் கைது

சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்த புகாரில், மேலும் இரண்டு மலேசியர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் 30 வயதுடைய ஒருவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார், 20 வயதுடைய மற்றொருவர் உட்லண்ட்ஸ் அருகே பிடிபட்டதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் முதல் நபர், குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த ஆதாயங்களைத் தக்கவைக்க மற்றவர்களுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இரண்டாவது நபர் மீது நாளை அதே குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

பணமோசடிக்கு பலியானவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைச் சேகரிப்பதற்காக, சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத நபர்களால் இவ்விருவரும் பணியமர்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக 500,000 சிங்கப்பூர் டாலர் (1.53 மில்லியன் மலேசிய ரிங்கிட்) அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் இத்தகைய வழக்குகளுக்காக மொத்தம் எட்டு மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதுபோன்ற மோசடி கும்பல்களுக்கு உதவும் பணிகளுக்காக சிங்கப்பூருக்கு வரும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 20 அன்று, 62 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் M1 தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிகாரிகள் எனக்கூறி வந்த அழைப்புகளைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புக்கிட் பாத்தோக் முகவரிக்கு அனுப்பப்பட்ட ஆப்பிள் (Apple) தயாரிப்புகளுக்காக, அவரது வங்கிக் கணக்கிலிருந்து கழிக்க முடியாத 350 சிங்கப்பூர் டாலர் பாக்கி இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது.

அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முயன்றபோது, அவர் ஒரு போலி MAS விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த அதிகாரி, அவர் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அந்தப் பெண்ணின் சொத்துக்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது, அதில் 8.6 கிலோ தங்கம் அடங்கும். பின்னர், அந்தத் தங்கத்தை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைமையகத்திற்கு கொண்டு வருமாறு கூறப்பட்டது. அங்கு ஒரு அதிகாரி, ஒரு “ரகசியக் குறியீட்டை” கூறி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தங்கத்தைப் பரிசோதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ரகசியக் குறியீட்டைக் கூறிய ஒரு நபரிடம் தங்கம் நிரப்பப்பட்ட பையை ஒப்படைத்தார். பின்னர், MAS அலுவலகத்தில் இருந்த பாதுகாப்புப் காவலரிடம் அந்த நபரைப் பற்றி விசாரித்தபோது, அவர் MAS அதிகாரி அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.

 

 

-fmt