சரவாக்கில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது பூனைகள் மூலம் இந்தத் தொற்று பரவுவதைத் தடுப்பதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்குவது குறித்து மாநில சுகாதாரத் துறை மற்றும் கால்நடை மருத்துவச் சேவைத் துறையுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சரவாக் துணை முதல்வர் டாக்டர் சிம் குய் ஹியான் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
“சரவாக்கில் ரேபிஸ் தொடர்ந்து ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. தெருநாய்களைத் தவிர்த்து, பதிவாகும் கடித்தல் மற்றும் கீறல் சம்பவங்களில் சுமார் பாதிக்கும் மேலானவை பூனைகள் சம்பந்தப்பட்டவை,” என்று அவர் கூறினார்.
தற்போது ரேபிஸ் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சவால் பூனைகளுக்கு தடுப்பூசி போடுவதாகும். பூனைகள் எளிதில் கீறக்கூடியவை என்பதாலும், அவற்றின் உமிழ்நீர் ஆபத்தான வைரஸைக் கொண்டு செல்லும் என்பதாலும் இது நாய்களை விட மிகவும் கடினமானது,” என்று அவர் இன்று கூச்சிங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சரவாக் பொதுச் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான சிம், ரேபிஸ் அச்சுறுத்தலை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், தங்கள் செல்லப்பிராணிகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை எப்போதும் மேற்கொள்ள வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.
நாய் கடித்தாலோ அல்லது பூனை கீறினாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதலில் காயத்தை நீரால் கழுவ வேண்டும், பின்னர் கிளினிக்கிற்குச் சென்று பாதிப்பை ஆய்வு செய்து தடுப்பூசி போட வேண்டும்.
மனிதர்களுக்கான ரேபிஸ் தடுப்பூசிகள் இப்போது கிளினிக்குகளில் கிடைக்கின்றன, இதனால் விரைவாகவும் திறம்படவும் சிகிச்சை அளிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
சரவாக்கில் ரேபிஸ் நோயால் ஏற்பட்ட சமீபத்திய மரணத்தைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 18 அன்று கூச்சிங்கில் 10 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தான். இது இந்த ஆண்டில் அந்த நோயினால் ஏற்பட்ட மூன்றாவது மரணமாகும்.
பிப்ரவரி 11 அன்று அந்தச் சிறுவனை ஒரு தெருநாய் கடித்ததாகவும், ஆனால் அவன் மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே காயத்தைத் தானாகச் சுத்தம் செய்துகொண்டதாகவும் சரவாக் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்த 10 வயது சிறுவனின் மரணத்திற்கு, நாய் கடித்த பிறகு சிகிச்சை பெறுவதில் ஏற்பட்ட தாமதமே முக்கிய காரணியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2017-ல் மாநிலத்தில் ரேபிஸ் பரவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
நாய் மற்றும் பூனை உட்பட ரேபிஸ் தொற்றுள்ள விலங்குகளின் கடி, கீறல் அல்லது அவற்றின் உமிழ்நீர் மூலமாக இந்த நோய் பரவக்கூடும் என்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.
“விலங்கு கடித்தாலோ அல்லது கீறினாலோ, காயத்தை உடனடியாக ஓடும் நீரில் சோப்பு போட்டு குறைந்தது 15 நிமிடங்கள் கழுவ வேண்டும்; அதன் பிறகு உடனடியாக ஒரு சுகாதார நிலையத்திற்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்,” என்று அது கூறியுள்ளது.
-fmt
























