பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா சைனுதீன் தொடர்ந்து நீடிக்கவே 69 எதிர்க்கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
இது குறித்து தானா மேரா எம்பி இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் கூறுகையில், “கடந்த மாதம் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்ற போதிலும், 43 எம்பிக்களைக் கொண்ட அந்தக் கட்சியினரே ஹம்சா தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்,” என்று தெரிவித்தார்.
“இதுவரை கிடைத்த தகவலின்படி, பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவு இருப்பதால், ஹம்சா சைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடருவார் என்பது உறுதியாகியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்த ஒருமித்த கருத்து வலுவாக உள்ளது. ஹம்சா அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்,” என்று முன்னாள் துணை அமைச்சர் இக்மல் ஹிஷாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஹம்சா நீக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் எஞ்சியுள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதையே ஆதரிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஹம்சா சிறப்பாகச் செயல்பட்டிருப்பதால் அவர் அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்றே பெரும்பான்மையினர் விரும்புவார்கள்,” என்று முன்னாள் அம்னோ உறுப்பினரான அவர் கூறினார்.
இது குறித்து கருத்து அறிய செய்தியாளர்கள், பெரிக்காத்தான் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரைத் தொடர்பு கொண்டுள்ளது.
கட்சித் தலைவர் முஹ்யிதின் யாசினுடனான தலைமைத்துவப் மோதலுக்குப் பிறகு, ஹம்சா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக புதிய எதிர்க்கட்சித் தலைவரை இம்மாத இறுதிக்குள் பெரிக்காத்தான் பெயரிட வேண்டியுள்ளது.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் ஜூன் மாதத்தில்தான் நடைபெற உள்ளது என்பதால், புதியவரைத் தேர்வு செய்யக் கூட்டணிக்குத் தாராளமாக அவகாசம் உள்ளது. இருப்பினும், ஹம்சாவிற்குப் பதிலாக விரைவில் ஒருவரை நியமிக்குமாறு பல பெர்சத்து தலைவர்கள் பாஸ் கட்சியை வலியுறுத்தியுள்ளனர்.
பெரிக்காத்தான் தலைமையிலான நம்பகமான வட்டாரத்தின்படி, இதுவரை இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், உச்சமன்றக் கூட்டம் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், பாஸ் மற்றும் பெரிக்காத்தா பொதுச்செயலாளரான கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் தகியுடின் ஹசான் இப்பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பதவி விலக வேண்டும் என்று விரும்பினால், அந்தப் பொறுப்பை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஹம்சா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு, இக்மல், கட்சியின் துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டி மற்றும் வனிதா பிரிவுத் தலைவி மாஸ் எர்மியாத்தி சம்சுடின் உள்ளிட்ட பெர்சத்துவின் 19 எம்பிக்களில் 13 பேரின் பகிரங்க ஆதரவு உள்ளது.
அதேவேளையில், ரொனால்ட் கியாண்டி மற்றும் மாஸ் எர்மியாத்தி ஆகியோர் பெர்சத்து கட்சியால் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ரோசோல் வாஹிட் (உலு திராங்கானு), கு அப்துல் ரஹ்மான் கு இஸ்மாயில் (குபாங் பாசு), முஸ்லிமின் யாயா (சுங்கை பெசார்) மற்றும் அப்துல் காலிப் அப்துல்லா (ரொம்பின்) ஆகியோர் அடங்குவர்.
எஞ்சியவர்கள் கிளிர் நோர் (கெத்தேரே), சக்ரி ஹசான் (கங்கார்), ரோஸ்லான் ஹாஷிம் (கூலிம் பண்டார் பாரு), நார்டின் அகமது இஸ்மாயில் (லுமுட்), கலாம் சாலன் (சபாக் பெர்ணம்) மற்றும் இஸ்லாஹுதீன் அபாஸ் (மெர்சிங்) ஆவர்.
-fmt
























