சிகாகோவில் நடைபெற்ற ஒரு திருப்புமுனை மருத்துவ ஆய்வில், மேம்பட்ட நிலை கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஓராண்டு உயிர்வாழும் விகிதத்தை ஒரு சோதனை மருந்து இருமடங்காக அதிகரித்துள்ளது. மிகவும் கொடிய புற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படும் இதற்கு எதிராக இந்த ஆய்வு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த ஆய்வை மலேசிய மருத்துவர் ஒருவர் முன்னின்று நடத்தியுள்ளார்.
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் மு. தேவலிங்கம், மேம்பட்ட நிலை கணையப் புற்றுநோய் கண்டறியப்பட்ட பெரும்பாலானோர் ஓராண்டுக்கும் குறைவாகவே உயிர்வாழும் நிலையில், இந்த சிகிச்சை முறை அவர்களின் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட மருத்துவ ஆய்வின்படி, ‘எலராக்லுசிப்’ மற்றும் வழக்கமான கீமோதெரபி சிகிச்சையை இணைந்து பெற்ற நோயாளிகள், வெறும் கீமோதெரபி மட்டும் பெற்றவர்களைவிட ஓராண்டிற்குப் பிறகு உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்த சிகிச்சை முறை மரணிக்கும் அபாயத்தை 38% வரை குறைத்துள்ளது.
‘நேச்சர் மெடிசின்’ (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள், கணையப் புற்றுநோயாளிகளில் ஒரு பரந்த குழுவினருக்கு அர்த்தமுள்ள உயிர்வாழும் நன்மையை நிரூபித்துள்ளன. இது சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்றாகும்.
“திடமான புற்றுநோய் கட்டிகளில் சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் சவாலான ஒன்றாக கணையப் புற்றுநோய் இன்றும் உள்ளது. இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் ஒரு நம்பிக்கையான சூழலை ஏற்படுத்தியுள்ளன,” என்று தேவலிங்கம் தெரிவித்தார்.
இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துவதற்காக, தேவலிங்கமும் அவரது குழுவினரும் தற்போது மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடர்ந்து வருகின்றனர். இது உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 60 மையங்களைச் சேர்ந்த 233 நோயாளிகள் பங்கேற்றனர். குறிப்பாக, உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவிய கணையப் புற்றுநோய் உள்ளவர்கள் இதில் கவனம் பெற்றனர். எலராக்லுசிப் மருந்தை உட்கொண்ட நோயாளிகள் சராசரியாக 10.1 மாதங்கள் உயிர்வாழ்ந்தனர்; இது வெறும் கீமோதெரபி மட்டும் எடுத்துக்கொண்டவர்களின் (7.2 மாதங்கள்) காலத்தை விட அதிகம்.
குறிப்பாக, சிகிச்சை பெற்ற குழுவில் 44% பேர் ஓராண்டுக்குப் பிறகும் உயிர்வாழ்ந்தனர் (கட்டுப்பாட்டு குழுவில் இது 22% மட்டுமே). மேலும், சுமார் 13% பேர் இரண்டு ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்தனர். இது வெறும் கீமோதெரபி மட்டும் பெற்றவர்களிடம் காணப்படாத ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்த மருந்து வழக்கமான சிகிச்சைகளிலிருந்து மாறுபட்டு, புற்றுநோய் கட்டியைச் சுற்றியுள்ள சூழலை இலக்கு வைத்துச் செயல்படுவதாகவும், புற்றுநோய் செல்களுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீண்டும் தூண்டிவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சோர்வு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பக்கவிளைவுகள் குறித்து அறிக்கையிடப்பட்ட போதிலும், இந்த மருந்தின் பாதுகாப்புத் தன்மை கையாளக்கூடிய அளவிலேயே இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கணையப் புற்றுநோய் தற்போது அமெரிக்காவில் புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளது. மேலும், சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கடினமான புற்றுநோய்களில் ஒன்றாகவும் இது தொடர்ந்து நீடிக்கிறது.
-fmt
























