இந்திய மத்திய அரசை எதிர்த்து அந்நாட்டு இராணுவத் தளபதி வழக்கு

இந்திய மத்திய அரசை எதிர்த்து, அந்நாட்டு இராணுவத் தளபதி வி.கே.சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஒரு இராணுவத் தளபதி மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவின் இராணுவத் தளபதியாக உள்ள, வி.கே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை நிலவுகிறது. இவருடைய மெட்ரிகுலேஷன் பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி, 10.5.51 என்றும், இவரை தேசிய பாதுகாப்பு துறைக்கு தேர்வு செய்ய, யு.பி.எஸ்.சி., நடத்திய நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில், 10.5.50 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தன் பிறந்த தேதி, 10.5.51 என, வி.கே.சிங் வற்புறுத்தி வருகிறார். ஆனால், இவரது கருத்தை இராணுவ அமைச்சகம் ஏற்கவில்லை. இதையடுத்து, வி.கே.சிங், வரும் மே, 31ல் ஓய்வு பெற வேண்டியுள்ளது.

தன் பிறந்த தேதியை ஏற்க மறுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலை எதிர்த்து, வி.கே.சிங். உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் இராணுவத் தளபதி பதவியில் உள்ள ஒருவர், அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது, இந்தியாவில் முன்னர் எப்போதும் நடந்திராத விஷயமாக கருதப்படுகிறது.

TAGS: