நாளை பத்து பகாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு உத்தரவிட்டுள்ளது. அங்கு நிலவி வரும் மோசமான புகைமூட்ட நிலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்து பகாட்டில் இன்று இரவு 8 மணி நிலவரப்படி காற்றின் தூய்மைக்கேட்டு குறியீடு (API) 203-ஐ எட்டியுள்ளதாகவும், இது மிகவும் ஆரோக்கியமற்ற அளவைக் குறிப்பதாகவும் அந்தத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு, ஜோகூர் மாநில கல்வி இலாகா அல்லது பத்து பகாட் மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, நடப்பில் உள்ள உத்தரவுகளுக்கு உட்பட்டு, பள்ளிகள் தங்களின் வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் மற்றும் கற்றல் (PdPR) முறையை மேற்கொள்ள வேண்டும், என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகள் தங்களின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலமாக PdPR கற்பித்தல் முறை, மாணவர்களுக்கான வீட்டுப்பாடங்கள் மற்றும் தொடர்புகொள்ளும் வழிமுறைகள் குறித்துப் பெற்றோர்களுக்கு அல்லது பாதுகாவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அந்த மாவட்டக் குழு கூறியுள்ளது.
மேலும், தேசிய புகைமூட்ட நடவடிக்கை திட்டம் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே இந்த மூடல் நடவடிக்கைக்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த எந்தவொரு முடிவும், காற்றின் தரம் மற்றும் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும்,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இன்று மாலை நிலவரப்படி ஜோகூர் மாநிலமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி அளவில் பத்து பகாட்டில் காற்றின் தூய்மைக்கேட்டு குறியீடு (API) 196-ஐ எட்டியது. அதைத் தொடர்ந்து செகாமட் (171), பாசிர் கூடாங் (171), தங்காங் (171), குளுவாங் (168), லார்க்கின் (166), கோத்தா திங்கி (162) மற்றும் பெங்கேராங் (160) ஆகிய இடங்கள் பதிவாகியுள்ளன.
காற்றின் தூய்மைக்கேட்டு குறியீடானது (API) 0 முதல் 50 வரை இருந்தால் நலம் எனவும், 51 முதல் 100 வரை மிதமான நிலை எனவும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலை எனவும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலை எனவும், 301-க்கு மேல் அபாயகரமான நிலை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
-fmt
























