அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்குக் கட்டாயக் காப்பீடு கொண்டுவர சுகாதார அமைச்சகம் பரிந்துரை

பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கான சிகிச்சைச் செலவுகளை ஈடுகட்டவும், புதிய மருத்துவக் கட்டண நிலுவைத் தொகையைத் தவிர்க்கவும், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு அல்லது காப்பீட்டுப் பங்களிப்பைக் கட்டாயமாக்க சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளது.

நாடாளுமன்ற மக்கள் அவையில் பேசிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் ஹனிஃபா ஹஜார் தாயிப், அரசாங்கத்தின் அகதிகள் பதிவு முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு இது பொருந்த வேண்டும்.

மேலும், வெளிநாட்டு நோயாளிகள் சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மருத்துவக் கட்டணங்களில் 80%-க்கும் அதிகமானவை, முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறியவர்கள் அல்லது குடியுரிமை இல்லாதவர்களால் ஏற்பட்டவை என்றும் ஹனிஃபா சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில், குறிப்பாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுவதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.

இது ஜெனிவா பிரகடனம், ஹிப்போகிரட்டீஸ் சத்தியப்பிரமாணம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் அல்மா-அட்டா பிரகடனம் ஆகியவற்றிற்கு இணங்க அமைந்துள்ளது, என்று சுகாதார அமைச்சின் நிதிநிலை தொடர்பான தணிக்கையாளர் ஜெனரலின் அறிக்கை மீதான விவாதத்தை நிறைவு செய்து பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டில் 359 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த அமைச்சின் ஒட்டுமொத்த வரவிருக்கும் நிலுவைத் தொகை, 2025 இல் 336 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது என ஹனிஃபா தெரிவித்தார். இது 6.4% வீழ்ச்சியாகும்.

வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட செலுத்தப்படாத மருத்துவக் கட்டணங்கள், கட்டணம் வசூலிப்பதில் உள்ள குறைபாடுகளால் மட்டுமே ஏற்பட்டவை அல்ல.

நோயாளிகளின் நிதி நெருக்கடி, காப்பீடு இல்லாமை, கட்டணம் செலுத்தாமல் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறுவது, மற்றும் தவறான அல்லது முழுமையற்ற அடையாளம் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற காரணங்களோடும் இவை தொடர்புடையவை ஆகும்.

இத்தகைய காரணங்களால், நோயாளிகளைக் கண்டறிந்து, கட்டணங்களை வசூலிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் சுகாதார அமைச்சுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன, என்று அவர் கூறினார்.

இந்த நிலுவைத் தொகையை மீட்பதற்காகப் பொது சுகாதார நிலையங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மூன்று நினைவூட்டல் கடிதங்களை அனுப்புவது, சட்டப்பூர்வ கோரிக்கைகள் அல்லது அறிவிப்புகளை அனுப்புவது, நோயாளிகளின் தூதரகங்கள் அல்லது உறவினர்களைத் தொடர்புகொள்வது, முதலாளிகளிடம் இருந்து கட்டணங்களைக் கோருவது மற்றும் பணம் செலுத்த முடியாதவர்களின் கட்டணங்களைச் செலுத்த உதவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை இதில் அடங்கும்.

சிகிச்சையின் போது வைப்புத்தொகை மற்றும் கட்டணங்களைச் செலுத்துவதைக் கட்டாயமாக்குதல், ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை முறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் வரவிருக்கும் நிலுவைத் தொகைகளைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நோயாளிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பே கட்டணங்களை வசூலிக்கும் அணுகுமுறையை அமைச்சு வலுப்படுத்தி வருகிறது.

முதலாளிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பும் பலப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஹனிஃபா, அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவுகளுக்கு ஏற்ப, முதலாளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வங்கி உத்தரவாதங்களின் மதிப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

 

-fmt