1,000 இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும் பள்ளி இடைவிலகலைக் குறைக்கவும் சாண்டியாகோ வலியுறுத்தல்

முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, குறைந்தது 1,000 இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும், சமூகத்தில் பள்ளி இடைவிலகல் விகிதத்தைக் குறைக்கவும் 2027 வரவு செலவுத் திட்ட த்தில் சிறப்புத் திட்டங்களைச் சேர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

திறன் மேம்பாட்டிற்காக 1,000 இந்திய இளைஞர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும், இதற்கான தகுதியானவர்களைப் பள்ளிகள், திறந்த விண்ணப்பங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அடையாளம் காண வேண்டும் என்றும் சாண்டியாகோ கூறினார்.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வி (TVET) மற்றும் இதர திட்டங்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படலாம் என்றும், குறிப்பாக இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சார்ந்த தொழில்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மாணவர்கள் பள்ளித் திட்டத்திலிருந்து பாதியிலேயே விலகுவதைத் தடுக்க, 1,000 மாணவர்கள் என்ற குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொண்டு, அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக எஸ்பிஎம் தேர்வுக்குப் பிறகு மேல் படிப்பைத் தொடராத மாணவர்களிடையே காணப்படும் அதிகளவிலான இடைவிலகல் விகிதத்தை, அவர்களுக்கு டிவிஇடி மற்றும் இதர தொழிற்பயிற்சி திட்டங்கள் மூலம் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்குவதன் வழியாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

இது அவர்கள் நடைமுறை சார்ந்த, தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெறவும், தகுதிகளைப் பெற்று வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொள்ளவும் ஒரு மாற்றுப் பாதையை வழங்கும்.

இத்தகைய திட்டங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களைக் கல்வி அல்லது பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட வைக்க உதவுவதோடு, அவர்கள் கும்பல் சேர்க்கை உள்ளிட்ட எதிர்மறையான தாக்கங்களுக்குள் ஈர்க்கப்படும் அபாயத்தையும் குறைக்கும், என்று அவர் கூறினார்.

இந்தியர்களிடையே நிலவும் இப்பிரச்சினையை வெறும் சண்டியர்த்தனம் அல்லது கும்பல் குற்றச்சாட்டாக மட்டும் சித்தரிப்பதற்குக் கண்டனம் தெரிவித்த சாண்டியாகோ, அவ்வாறு செய்வது இச்சமூகத்தின் மீது அநியாயமாக ஒரு தவறான முத்திரையைக் குத்திவிடும் என்று எச்சரித்தார்.

பிரதமரின் தலைமையில் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவை  அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இக்குழுவானது, மூத்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைத்து, இந்திய சமூகத்தைப் பாதிக்கும் கொள்கைகளை நேரடியாக ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உதவும், என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் உடனடி கவனம், திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துவதிலும், பள்ளி இடைவிலகல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இருக்க வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ‘கெலொம்பாங் சக்சாமா’  என்று அழைக்கப்படும் 19 இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக ஒரு பிரத்யேக சட்டப்பூர்வ அமைப்பு, பொது-தனியார் நிதி ஆதார வாகனம் மற்றும் ஓர் அமைச்சரவைக் குழு ஆகியவற்றை நிறுவ முன்மொழிந்தது.

இக்கூட்டமைப்பின் சார்பில் பேசிய சாண்டியாகோ, அந்த நிதி ஆதார வாகனத்தையும் பிரத்யேக சட்டப்பூர்வ அமைப்பையும் நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, இந்த அமைச்சரவைக் குழு கூடிய விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

 

 

-fmt