அதிகாரப் பகிர்வே இலங்கைக்கு பொருத்தமானது: எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்கும் அதிகாரப் பரவலாக்கல் முறையே பொருத்தமானது என இந்தியா கருதுகின்றதென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்குக் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்தேன். இந்தப் பகுதி மக்கள் கடந்த காலப் போரால் பல அழிவுகளைச் சந்தித்து இருக்கின்றார்கள். பல துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இன்று அமைதி காணப்படுகின்றது. வட மாகாண மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை இந்திய அரசாங்கம் நன்கறியும். உங்களுக்கு உரித்தானது என்ன என்பதையும் இந்திய அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது. ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அயல்நாடு என்ற ரீதியிலும் இலங்கைக்கு எம்மால் இயன்றவரை உதவிகள் வழங்கி வருகின்றோம்.

எனது இந்த பயணத்தின் போது இடம் பெயர்ந்த மக்களோடும் தொடர்பு கொண்டு அவர்களுடைய பிரச்னைகள், தேவைகள் தொடர்பாகவும் நன்கு அறிந்து கொண்டுள்ளேன். அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்தும் நோக்குடன் வீடமைப்புத் திட்டத்தினை ஆரம்பித்தோம். அத்தோடு மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றோம். கடனுதவிகள் வழங்குவதற்கும் இந்திய அரசானது முன்வந்துள்ளது. சொந்த இடங்களை விட்டு போரால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிவரும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு 270 மில்லியன் அமெரிக்க டாலரை மத்திய வங்கியின் ஊடாக ஒதுக்கியுள்ளது” என்று எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

TAGS: