இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும்!

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா-விடம் யாழ்ப்பாண கிறிஸ்தவ ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், இது தொடர்பிலான கடிதம் ஒன்றை தோமஸ் சௌந்தரநாயகம் வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் ஒரு ஆண்டு காலமாக நடைபெற்றுள்ள போதிலும், எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகள் துரிதமாகவும், பயனுள்ளதாகவும் அமைவதற்கு இந்தியா அதில் நேரடியாகப் பங்களிக்க வேண்டும். அவ்வாறான பங்களிப்பின் மூலம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணமுடியும் என்ற நோக்கத்திலேயே இந்த வேண்டுகோளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்திருப்பதாக யாழ்ப்பாண ஆயர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை, இலங்கை அரச படைகளினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இந்தியாவின் முன் முயற்சியின் மூலமாகவே, தமிழ்த் தேசியக கூட்டமைப்புக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே பேச்சுவார்த்தைகள் பலனுள்ளதாக அமைவதற்கு இந்தியா அதில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக இருப்பதாகவும் யாழ். ஆயர் கூறுகின்றார்.

TAGS: