பாஸ் இளைஞர்கள்: மாணவர் விசயத்தில் “சும்மா” இருக்கவில்லை

பாஸ் இளைஞர் பகுதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை (யுயுசிஏ)த் தான் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதை வலியுறுத்தியதுடன் கோலெஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) மாணவர் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு கெடா மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

“எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. அது தெளிவாக உள்ளது. மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக்கிடமும் இதைத் தெரிவித்துள்ளோம். ஐந்து மாணவர்களையும் பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்க வேண்டாம் என்றும் கேயுஐஎன்னையும்  கேட்டுக்கொண்டிருக்கிறோம்”, என்று பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார்.

மந்திரி புசாருடன் பேசியதுடன் கேயுஐஎன் நிர்வாகத்தைச் சந்தித்து மாணவர்களின் விசயத்தில் முன்னர் செய்த முடிவை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் நஸ்ருடின் தெரிவித்தார்.

என்றாலும், இப்போது மாணவர் ஐவரும் இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றிருப்பதால் இனி நீதிமன்றம்தான் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்றாரவர்.

பாஸும் பக்காத்தானும் யுயுசிஏ-க்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சிகள் என்பதால் அச்சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட இவ்விவகாரத்தில் அசிசான் தலையிட  வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்துவரும் வேளையில் நஸ்ருடினின் அறிக்கை வந்துள்ளது.

பாஸ் தலைமையகத்தில் மாணவர் ஆர்ப்பாட்டம்

மூன்று நாள்களுக்கு முன்பு, மாணவர் கூட்டமொன்று, கேயுஐஎன் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக பாஸ் செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து கோலாலம்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்தது.

அந்த ஐந்து மாணவர்களும் “சட்டவிரோத” பேரணி ஒன்றில் கலந்துகொண்டதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள், திருக்குர் ஆன் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியின் தங்குவிடுதி ஒன்று வகுப்பறையாக பயன்படுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த ஏப்ரல் மாதம் பேரணி நடத்தியுள்ளனர்.

அது பற்றி அவர்கள் ஊடகங்களிடமும் பேசியுள்ளனர். இது யுயுசிஏ விதிகளுக்கு முரணானது என்பதால் அவ்வைவர்மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.