பெர்சே: உங்கள் வாக்காளர் தகுதியைச் சரி பாருங்கள்

வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் அண்மைய காலமாக அம்பலமாகி வருவதைக் கருத்தில் கொண்டு தங்களது நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக்  கொள்ள வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு மலேசியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.

பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நோன்புப் பெருநாளுக்காக தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மாநகர மக்கள் பாசத்துக்குரிய தங்கள் உறவினர்களுக்குச் “சிறப்புச் செய்தியை” வழங்குமாறும் தூய்மையான, சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

“நாங்கள் இந்த பெருநாள் காலத்தில் மலேசியர்களுக்குச் சிறப்புச் செய்தியை விடுக்கிறோம். தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ளாதவர்களின் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இருப்பது குறித்த பல புகார்கள் பெர்சே 2.0க்குக் கிடைத்து வருகின்றன. முன்னறிவிப்பு இல்லாமல் வாக்களிக்கும் மையங்கள் மாற்றப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.”

“வெளிநாடுகளில் இருப்பவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் கூட அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”, பெர்சே 2.0 விடுத்த அறிக்கை கூறியது.

“அதனைத் தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் எளிதாகச் செய்ய முடியும். இணையத்தில் தேர்ச்சி உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள தங்கள் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடைய வாக்காளர் தகுதியை அறிந்து கொள்ள உதவலாம்.”

“உங்களுக்குத் தெரியாமல் உங்கள் வாக்குச் சாவடி மாற்றப்பட்டிருந்தாலோ அல்லது நீங்கள் பதிவு செய்யாத வேளையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலோ எங்களுக்கு [email protected] என்னும் மின் அஞ்சல் முகவரிக்கு நீங்கள் தகவல் அனுப்பலாம். இல்லை என்றால் 03-77844978 என்ற எண்ணுக்கு தொலைநகல் அனுப்பலாம்”, என்று பெர்சே குறிப்பிட்டது.

இன்னும் தங்களை வாக்காளராக பதிந்து கொள்ளாத 21 வயதிலும் அதற்கு மேற்பட்ட வயதிலும் உள்ள குடிமக்கள் அனைவரும் மூன்று நாள் நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறைக்கு பின்னர் அஞ்சலகத்துச் சென்று வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.

“வாக்களிப்பதற்கு உங்களுக்கு உள்ள உரிமையைப் புறக்கணிக்க வேண்டாம்! அடுத்த பொதுத் தேர்தலில் நீங்கள் வாக்களிப்பதை உறுதி செய்யுங்கள்”, என்று பெர்சே கூறியது.

TAGS: