ராகுல் காந்தியின் மீது காலணி வீச்சு!

இந்தியயாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியின் மீது, நேற்று முன் தினம், வாலிபர் ஒருவர் காலணியை வீசினார்.

அன்னா ஹசாரே அணியைச் சேர்ந்தவர்கள் மீது, இரண்டு நாட்களுக்கு முன் காலணி வீசப்பட்ட நிலையில், தற்போது ராகுல் மீதும் வீசப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் மீது காலணியை வீசிய வாலிபனை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில், எதிர்வரும் 30ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், தற்போது இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், டேராடூனில் நேற்று முன் தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல் பங்கேற்ற போது, அவரை நோக்கி வாலிபர் ஒருவர், காலணியை வீசினார். ஆனால் அந்தக் காலணி, ராகுல் இருந்த இடத்திலிருந்து, 10 மீட்டர் தூரத்தில் விழுந்தது.

பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், உத்தரகண்ட் மாநிலத்தில், அன்னா ஹசாரே அணியினர் பிரசாரத்தைத் தொடங்கிய போது, அங்குள்ள அரங்கம் ஒன்றில், அவர்களின் மீது காலணி வீசப்பட்டது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிவதற்குள், ராகுல் மீது காலணி வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: